உலகளாவிய திறனாளர்களை சிங்கப்பூருக்குக் கொண்டுவருவது, உள்ளூர் பணியாளர்களுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டு அவர்களுக்கு பதில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் வெற்றி தோல்விக்கான ஆட்டம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
திறந்த மனப்பான்மையையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாலும் தேவையான திறனாளர்களை வரழைப்பதாலும் சிங்கப்பூரின் வளர்ச்சி மேம்பட்டுள்ளதுடன் உள்ளூர்க்காரர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன என்றார் அவர்.
டாக்டர் டான் திங்கட்கிழமை (அக்டோபர் 3) அன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
நம் தேவைகளை நிறைவு செய்யும் வெளிநாட்டு ஊழியர் அணியை சிங்கப்பூர் எவ்வாறு உருவாக்கி வருகிறது, உள்ளூர் திறனாளர்களை அது எப்படி அதிகரித்து வருகிறது, பணி நியமனத்தில் அவர்கள் நியாயமாக பரிசீலிக்கப்படுவதை எவ்வாறு பாதுகாப்பது உள்ளிட்ட கேள்விகளை மன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.
ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது, தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறையில் எம்பிளாய்மண்ட் பாஸ் எனப்படும் வேலை அனுமதிச்சீட்டில் பணியாற்றிய வெளிநாட்டுத் திறனாளர்கள் அதிகரித்த அதே நேரத்தில் நிர்வாக, தொழில்நுட்பப் பணிகளில் சேர்ந்த உள்ளூர்க்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அமைச்சர் சுட்டினார்.
அந்தத் துறையின் வளர்ச்சியையும் சிங்கப்பூரின் மின்னிலக்கத் தேவைகள் அதிகரித்துள்ளதால் இங்குள்ளவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கூடியுள்ளதையும் அது காட்டுவதாக டாக்டர் டான் கூறினார்.
இப்போக்கு மற்ற துறைகளிலும் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். நிபுணத்துவர், நிர்வாகி, தொழில்நுட்பர் வேலைகளில் பணியாற்றும் சிங்கப்பூர்வாசிகளின் விகிதமும் அவர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.


