அங் மோ கியோவில் உள்ள சென்ட்ரல் வீவ் பிடிஓ வீட்டுத் திட்டத்தைக் கட்டுவதில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்கு சுமார் $250 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
வீடுகளை வாங்குவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு மானியங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டால் அரசாங்கத்துக்கு ஏற்படும் இழப்பு $270 மில்லியனாக உயரும் என்றார் அவர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய், திட்டத்தால் அரசாங்கத்துக்கும் வீவகவுக்கும் ஏற்படும் இழப்பு பற்றி கேட்ட கேள்வி களுக்கு அவர் பதில் அளித்தார்.
சென்ட்ரல் வீவ்@அங் மோ கியோ பிடிஓ வீட்டுத் திட்டம் அவ்வட்டார நகர மையத்தில் அமையும். 21 முதல் 32 மாடிகள் உள்ள ஐந்து புளோக்குகள் கட்டப்படும். ஈரறை ஃபிளெக்சி, நான்கறை, ஐந்தறை, மூன்று தலைமுறை வீடுகள் என 896 வீடுகள் அவற்றில் இருக்கும். திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிலத்தின் விலை 500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தை மதிப்பைப் பயன் படுத்தி, தலைமை மதிப்பாளர் தன்னிச்சையாக அதைக் கணக்கிட்டுள்ளதாக திரு லீ கூறினார்.
மேலும், நிலம் நாட்டின் கடந்தகால சேமிப்புநிதியின் ஒரு பகுதி என்று அவர் சுட்டினார். அதனால் நிலத்தை மேம்படுத்தும்போது அதற்கான விலையை வீவக கடந்தகால சேமிப்புநிதியில் செலுத்த வேண்டும் என்றும் அப் பணம் வருங்காலத் தலைமுறைக் காக மீண்டும் முதலீடு செய்யப்படும் என்றும் திரு லீ கூறினார்.

