சுவை பானங்களை அருந்திய பின்னர் காலி டின், பாட்டில்களைக் கொடுத்து பணம் பெறக்கூடிய மறுசுழற்சி முகப்புகள் விரைவில் உணவங்காடிகள், உணவு நிலையங்கள், அடுக்குமாடி தரைத்தளங்கள், பேரங்காடிகள் ஆகியவற்றில் அமைக்கப்பட உள்ளன.
தேசிய சுற்றுப்புற வாரியம் பரிந்துரைத்துள்ள மறுசுழற்சி திட்டத்தின்கீழ், 150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களிலும், உலோக கேன்களிலும் உள்ள சுவை பானங்களின் விலை கூடும்.
அவற்றின் விலையில் 10 காசு முதல் 20 காசு வரையிலான சிறிய வைப்புத்தொகை சேர்க்கப்படும்.
வெற்று டின்கள், பாட்டில்கள் உள்ளிட்ட கலன்களை ஊழியர்கள் கையாளும் முகப்புகள் அல்லது தானியக்க இயந்திரங்களில் கொடுத்து வாடிக்கையாளர்கள் இந்த வைப்புத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
ஆண்டுதோறும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்கள் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்திட்டம் 2024க்குள் செயல் படுத்தப்படலாம்.
சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 400 பெரிய பேரங்காடிகள், இங்குள்ள மொத்தப் பேரங்காடிகளில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன.
அப்பெரிய பேரங்காடிகள் சுவைபான கொள்கலன் மறுசுழற்சி முகப்புகளை வைப்பது கட்டாயமாக்கப்படலாம் என்று டாக்டர் கோர் கூறினார்.
பொட்டலமிடப்பட்ட பானங்களில் மூன்றில் ஒரு பங்கு பேரங்காடிகளில் வாங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு மறுசுழற்சி முகப்புகளை அமைப்பது வாடிக்கையாளர்களுக்கு சுலபமானதாக இருக்கும் என்றார்.
சமூக நிலையங்கள், அடுக்குமாடி தரைத்தளங்கள், விளையாட்டு நிலையங்கள், உணவங்காடிகள், காப்பிக் கடைகள் உள்ளிட்ட பொதுவில் அணுகக்கூடிய பிற இடங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
சாதாரண உணவு, பானக் கடைக்காரர்களுக்கும் நிர்வாகி களுக்கும் நீக்குப்போக்கு வழங்கப்படும் என்றார் டாக்டர் கோர் .
"உதாரணமாக, கடைக்காரர்கள் பானத்துடன் கொள்கலனுக்கான வைப்புத்தொகையை வசூலிக்கலாம். அப்போது வாடிக்கையாளர்கள் வெற்று பானக் கொள்கலன்களை மறுசுழற்சி முகப்புகளில் கொடுத்து பணம் பெறலாம்," என்று அவர் சொன்னார்.
காப்பிக் கடைகள், உணவங்காடிகள் போன்ற சாதாரண இடங்களுக்கு இது பொருந்தும்.
குவளைகளில் பானம் வழங்கப்படும்போது கட்டணம் இருக்காது.
உணவு, பான வளாகங்களை நடத்துபவர்களை இந்த மறுசுழற்சித் திட்டத்துக்கு ஆயத்தப்படுத்த, தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டத்தை வழிநடத்துபவர்களுடன் இணைந்து செயல்படும் என்று டாக்டர் கோர் கூறினார்.

