பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) மோசடித் திட்டத்துடன் தொடர்புடைய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு நேற்று மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2015 பிப்ரவரி முதல் 2016 ஜனவரி வரை 'நாகூர் டிரேடிங்' என்ற செயல்படா நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் லீ சொங் ஹூங், 42. அக்காலகட்டத்தில், அவரும் கும்பலின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து $56.5 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை தொடர்பில் குறைந்தது 183 விலைப்பட்டியல்களைப் போலியாகத் தயாரித்தனர்.
நாகூர் டிரேடிங் நிறுவனத்தின் விலைப்பட்டியல்களிலும் மற்ற ஆவணங்களிலும் மேலெழுதி, கையொப்பமிடும் பணியும் லீக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த மோசடியில் தமது பங்களிப்பிற்காக அவர் குறைந்தது $80,000 பெற்றார்.
உண்மையில் எவ்வித வணிக நடவடிக்கையும் இடம்பெறாமல், போலிப் பரிவர்த்தனைகளுக்காக பொய்யான விலைப்பட்டியல்களைத் தயாரிப்பதற்காகவே நாகூர் டிரேடிங் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்தன.
உள்ளூர் விநியோகிப்பாளர் களுக்குப் பணம் கொடுத்து, பொருள்களை வாங்கி அவற்றை மற்ற நிறுவனங்களிடம் விற்றதாகக் காட்டும் வகையில் அந்தப் போலி விலைப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த இடை நிறுவனங்களும் இந்த மோசடியில் பங்குகொண்டன. உண்மையில் எந்த வணிகமும் இடம்பெறாத நிலையில், அவை போலியாக விலைப்பட்டியல்களை உருவாக்கின.
பின்னர், 'இல்லாத' பொருள்களை வாங்கும்படி ஏற்றுமதியாளர்களை அந்தக் குற்றல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்புகொண்டனர். அப்பொருள்களை வெளிநாட்டில் வாங்குவதற்கும் ஆளை ஏற்பாடு செய்துவிட்டதாக அவர்கள் கூறினர்.
அதனையடுத்து, ஏற்றுமதியாளர்கள் அந்த இடை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடிய தொகையைச் செலுத்தினர். உண்மையில் அவை போலிப் பரிவர்த்தனைகள் என்பதை அறியாத ஏற்றுமதியாளர்கள், பின்னர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் ஜிஎஸ்டியைத் திரும்பத் தரக் கோரி விண்ணப்பித்தனர்.
இப்படி $114 மில்லியன் மதிப்பிற்குக் 'கற்பனையான' விற்பனை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசடித் திட்டம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே உள்நாட்டு வருவாய் ஆணையம் $722,189 தொகையை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிவிட்டது.