அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் எல்லா முதலாளிகளும் தங்கள் இல்லப் பணிப்பெண்களுக்கு மாதம் ஒரு நாள் கட்டாய விடுப்பு கொடுக்க வேண்டும் என்றும் அந்த விடுப்பு நாளுக்கு ஈடாக ரொக்கம் கொடுக்கப்படக்கூடாது என்றும் மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்த ஓய்வுநாளை வாரத்தில் எந்த நாளிலும் எடுக்கலாம். அது ஒரு முழு நாளாக அல்லது இரு அரை நாளாகவும் எடுக்கலாம்.
இவ்வாண்டு ஜூலையில் முதன் முதலாக இது குறித்து அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இல்லப் பணிப்பெண்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வீட்டுக்கு வெளியே தங்கள் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இல்லப் பணிப்பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு இந்த முறை ஆதரவளிக்கும் என்றும் புத்துணர்ச்சி பெறும் பணிப்பெண்கள் பதிலுக்குத் தங்கள் முதலாளிகளுக்கு சிறந்த ஆதரவை அளிக்க முடியும் என்றார் மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங்.
"எந்த நாளில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று பணிப்பெண்களுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் இடையே பரஸ்பர கருத்திணக்கம் ஏற்பட வேண்டும்," என்றும் திருவாட்டி கான் கூறினார்.
தங்கள் ஓய்வுநாளில் பணிப்பெண்கள் வீட்டிலேயே இருக்க முடிவெடுக்கலாம். அந்த ஓய்வுநாள் ஒரு மாதத்துக்குள்ளாக எடுக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தங்கள் பணிப்பெண்ணின் ஓய்வுநாளில், முதலாளிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள, அமைச்சு முதலாளிகளுக்கென ஒரு வழிகாட்டிப் புத்தகத்தை உருவாக்கி உள்ளது.
அந்த வழிகாட்டிப் புத்தகத்தில் மூத்தோர் உள்ள வீடுகளில் அவர்களைப் பகல்நேர பராமரிப்பு நிலை யத்தில் சேர்க்கும் நடவடிக்கையும் அடங்கும். மேலும் தனிப்பட்ட இல்ல பராமரிப்பு சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த சேவையை வழங்கும் ஊழியர்கள் மூத்தோரைக் குளிப்பாட்டுதல், கழிவறைக்குச் செல்லுதல் போன்ற அன்றாட சேவைகளிலும் உதவுவார்கள்.
ஓய்வுநாளில் பணிப்பெண்கள், அவர்களுக்காக அரசு சார்பற்ற அமைப்பான அய்தா வழங்கும் நிதி அறிவாற்றல் வகுப்புகளில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் வழிகாட்டிப் புத்தகம் யோசனை தெரிவிக்கிறது.
'ஃபாஸ்ட்' எனப்படும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கான சமூக ஆதரவு மற்றும் பயிற்சி நிலையம் அளிக்கும் மனவுறுதிப் பயிலரங்குகளிலும் பணிப்பெண்கள் பங்கேற்கலாம்.
மனிதவள அமைச்சின் இல்லப் பணிப்பெண்கள் மின்சேவைகள் இணையவாசல் மூலம் தங்கள் பணிப்பெண்ணின் ஓய்வுநாள் பற்றி முதலாளிகள் தெரிவிக்க வேண்டும் என்பதையும் அமைச்சு நினைவூட்டியது.
இந்த முறையை வரவேற்ற இல்லப் பணிப்பெண்கள் நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங், "மனிதவள அமைச்சுடன் தமது நிலையம் இணைந்து புதிய நடைமுறை தொடர்பில் முதலாளிகளுக்கும் பணிப்பெண்களுக்கும் உள்ள அக்கறைகளுக்குத் தீர்வு காணும்," என்று கூறினார்.

