மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கிலோகிராமுக்கு அதிகமான கஞ்சாவும் சிறிய அளவுகளில் இதர போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஆறு பேரிடமும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு 85,000 வெள்ளி என்று கூறப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை சிம்ஸ் ஈஸ்ட் அவென்யூவில் 41 கிராம் கஞ்சா வைத்திருந்த 26 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது வாகனத்தில் இருந்து மேலும் 2.24 கிலோகிராம் கஞ்சாவும் 10 'எல்எஸ்டி' போதைப்பொருள் தடவப்பட்ட முத்திரை வில்லைகளும் கைப்பற்றப்பட்டன.
சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் 500 கிராமுக்கு அதிகமான கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படலாம்.
நேற்றுக் காலை நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில், ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் 104 கிராம் கெட்டமின் போதைப்பொருள் பிடிபட்டது.
இதன் தொடர்பில் அங்கிருந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கெட்டமின் போதைப்பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

