தனியார் வாடகைக் காரில் பிரசவம்; ஓட்டுநர் செய்த பேருதவி

2 mins read
b97e4b04-892b-4adf-9496-9a5fb9fd5ac8
டடா கார் ஓட்டுநர் விக்டர் ஆல்பர்ட்டுடன் திருவாட்டி ஜாஸ்மின் டியோ, அவரது கணவர் நெல்சன், காரில் பிறந்த பெண் குழந்தை ஜேயான். படம்: ஷின் மின் -

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இளம்பெண் ஒருவருக்குப் பிள்ளை பிறந்தது.

ஆகஸ்ட் 24ஆம் தேதி காலையில் 32 வயது ஜாஸ்மின் டியோவுக்கு வயிற்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரையும் அவரது கணவரையும் அவசரமாக தேசியப் பல்கலைக்கழக

மருத்துவமனைக்கு தனியார் வாடகைக் காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் ஓட்டுநர் விக்டர் ஆர்பர்ட்.

ஆனால் புக்கிட் பாத்தோக் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, திருவாட்டி டியோவுக்கு வலி கூடியது.

கார்கள் மீண்டும் செல்லத் தொடங்கியதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பேருந்துத் தடத்தில் காரை ஓட்டி மருத்துவமனையை நோக்கி விரைந்தார்.

ஆனால் மருத்துவமனைக்கு ஐந்து நிமிடம் தூரத்தில் இருக்கும்போது திருவாட்டி டியோவின் பனிக்குடம் உடைந்தது.

சற்று நேரத்தில் ஓடும் வாகனத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையை அடைந்தவுடன் திரு ஆல்பர்ட் ஓடிச் சென்று மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தார். சிசுவின் கழுத்தைச் சுற்றியிருந்த தொப்புள் கொடியை மருத்துவர்கள் வெட்டினர்.

தாயையும் சேயையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தமது ஒரே எண்ணமாக இருந்தது என்று திரு ஆல்பர்ட் கூறினார்.

வயிற்றுவலி எடுத்தவுடன் ஆம்புலன்சை அழைக்கத் தோன்றவில்லை என்றும் நேரத்துக்குள் செல்ல முடியும் என்று நினைத்ததால் டடா (Tada) வாடகைக் காரைப் பதிவு செய்ததாகவும் திருவாட்டி டியோ கூறினார்.

டடா நிறுவனத்தின் தனியார் வாடகைக் காரில் பிள்ளை பிறந்திருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்பர் தாம்சன் ரோட்டில் ஒருவருக்கு டடா காரில் பிள்ளை பிறந்தது.

தமது ஓட்டுநர் செய்த உதவியை நினைத்து பெருமைப் படுவதாக டடா கூறியது.