பொன்மணி உதயகுமார்
முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் 45வது விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியோரில் ஒருவருக்கு 'ஜாசா செமர்லாங்' எனும் மெச்சத்தக்க சேவை விருதும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியோரில் எட்டு பேருக்கு 'ஜாசா பக்தி' எனும் நீண்டகால சேவை விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
'ஜாசா பக்தி' விருதை பெற்ற எட்டு பேரில், கோதரி ஷா இபுறாஹிம், 60, தன் சேவை இளையர்களை சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறார். தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணும் இவர் 30 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
திரு முஹம்மது இல்யாஸ், 55, 'ஜாசா பக்தி' விருதை பெற்றவர்களில் மற்றொருவர். பென்கூலன் பள்ளிவாசலின் மறுசீரமைப்பு பணி களில் முனைப்புடன் ஈடுபட்டவர்.
ஆண்டுதோறும் நடக்கும் இவ்விருது விழா சென்ற ஆண்டு கொவிட்-19 தொற்றால் இணையம் வழி நடந்த நிலையில், இவ்வாண்டின் விழாவிற்கு கடந்த ஆண்டு விருது பெற்றவர்களையும் இஸ்தானாவிற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் அழைத்திருந்தார்.