மின்சாரக் கோளாறு காரணமாக உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் ஞாயிறு காலை பாதுகாப்புச் சோதனை பல மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பராமரிப்புப் பணியின்போது மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயல்படவில்லை.
பராமரிப்புக்காக பிரதான மின் விநியோகம் நிறுத்தி வைக்கப் படும்போது மின் உற்பத்தி இயந்திரம் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் அது செயல்படாததால் ஞாயிறு காலை குடிநுழைவு சோதனைகள் பாதிக்கப்பட்டன.
முன்னதாக அந்த இயந்திரம் சோதிக்கப்பட்டு தயார்நிலையில் இருந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது.
பராமரிப்புப் பணி நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்குத் தொடங்கப்பட்டது. 12.20 மணிஅளவில் மின் உற்பத்தி இயந்திரம் செயல்படவில்லை.
இந்த நிலையில் துவாஸ் சோதனைச் சாவடிக்கு பயணிகள் திருப்பிவிடப்பட்டனர்.
கடற்பாலத்தில் இருந்த வாகனங்கள் மற்றும் பயணிகள் பழைய உட்லண்ட்ஸ் குடிநுழைவு சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை 4.00 மணியளவில் மின்விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து படிப்படியாக குடிநுழைவு சோதனைகள் தொடங்கி 6.25 மணிஅளவில் வழக்கநிலையை அடைந்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவித்த ஆணையம், பொறுமை காத்து, ஒத்துழைப்பு வழங்கிய பயணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.

