காயத்திரி காந்தி
உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் மனநல ஆதரவு தொடர்பான முயற்சிகளை முடுக்கிவிடுவதும் இந்த தினத்தின் முதன்மை நோக்கமாகும். மனநலம் தொடர்பான தங்களின் பயணத்தைப் பற்றி இன்றைய இளையர் முரசில் பகிர்ந்துகொள்கின்றனர் சிலர்.
மனநல ஆலோசனை நாடுவது
இயல்பானதாக வேண்டும்
வழக்கநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாததால், உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஓராண்டைக் கழிக்க வேண்டிய நிலை லஷ்னா நலேந்திரனுக்கு ஏற்பட்டது. உடன் பயின்றவர்கள் தங்களின் கல்விப் பயணத்தின் அடுத்த நிலைக்குச் சென்றனர். ஆனால் அவ்வாறு செல்ல முடியாத லஷ்னா துவண்டு போனார். தன் மனநலனைச் சீராக்க முயற்சி எடுத்தாக வேண்டும் என உணர்ந்தார்.
"எனக்கு முதல் தடையாக இருந்ததே நான்தான் என்பதை உணர்ந்தேன். என் மனநலனைப் பேணிக்காப்பதற்கான முதல் படியை எடுத்து வைத்தேன். அதைப் பற்றி பேசுவது மிகக் கடினமாக இருந்தது," என்றார்.
தனக்கு உதவி தேவை என்பதை ஒருவர் உணர்வதும் தன் உணர்வுகளைச் சமாளிக்கும் வழிமுறையைக் கண்டறிவதும் முக்கியம் என்று குறிப்பிட்டார் லஷ்னா.
மன உளைச்சலிலிருந்து மீண்டுவர, தன் குடும்பத்தாரும் முக்கியப் பங்காற்றியதாக லஷ்னா பகிர்ந்துகொண்டார்.
"நான் தனியாக இருக்க விரும்புவதை என் பெற்றோர் உணர்ந்து, எனக்காக அமைதியான சூழலை உருவாக்கித் தந்தார்கள். நான் என் வழக்கநிலைத் தேர்வு முடிவுகளால் சோகத்தில் இருந்தபோது அவர்களின் பேச்சு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தது," என்று லஷ்னா கூறினார். பலதுறைத் தொழிற்கல்லூரியில் சமூக அறிவியல் துறையில் பயிலவேண்டும் என்று விரும்பிய லஷ்னா, தன் மனநலனுக்கு முன்னுரிமை தரத் தொடங்கினார்.
நண்பர்களிடம் பேசுவது, மனநலன் பேணும் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றைவிட மனநல ஆலோசகரின் உதவியை நாடுவதே மன அழுத்தத்தைச் சமாளிக்கப் பெரிதும் உதவும் என்கிறார் லஷ்னா.
"நான் என்னை முன்னிலைப்படுத்திக்கொண்டேன். என் மனநலமும் மேம்பட்டது. என் படிப்பில் சிறந்து விளங்கி உயர்நிலைப் பள்ளியில் முதல் ஐந்து மாணவர்களில் ஒருவராகச் தேர்ச்சி பெற்றேன்," என்றார் லஷ்னா.
இன்று தொண்டூழியத் தொடர்புகள் நிர்வாகியாகப் பணிபுரிந்தவாறு சிறு வணிகம் ஒன்றுக்கு உரிமையாளராகவும் திகழ்கிறார் 27 வயது லஷ்னா. உதவி தேவைப்படும்போது மனநல ஆலோசகரை நாடும் சூழல், சமுதாயத்திலும் இளையர்களிடத்தி லும் இயல்பான ஒன்றாக இருக்கவேண்டும் என்பது இவரின் திடமான கருத்து.
பெற்றோர், நண்பர்கள் ஆதரவு முக்கியம்
இளையர்கள் தங்கள் படிப்பு தொடர்பில் மன அழுத்தத்தையும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் சமாளிக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் நண்பர்களுடனும் பெற்றோருடனும் மனம்விட்டுப் பேசுவதுகூட சிரமமாகலாம். இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகும் இளையர்கள் தங்களுக்கு உதவி தேவை என்பதை முதலில் உணரவேண்டும். தாங்கள் சந்திக்கும் இன்னல்கள், சவால்கள் போன்றவற்றைச் சமாளிக்க மனநல உதவி நாடுவது முக்கியம் என உளவியலாளர் புனிதா குணசேகரன் தெரிவித்துள்ளார்.
"சிங்கப்பூர் இளையர்களில் 18 விழுக்காட்டினர் மனச்சோர்வால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய இளையர்களுக்குச் சமூகத் தொடர்புகள் மிகவும் முக்கியம். எனவே அவர்கள் தங்கள் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நண்பர்களையே இயல்பாக நாடுகின்றனர். அந்நேரத்தில் நண்பர்கள் தோள்கொடுத்து ஆதரவளிப்பது அவசியம்," என்று கூறினார் திருவாட்டி புனிதா. அதேவேளையில், இளையர்கள் மனநலனுக்குப் பெற்றோரும் அவர்களது பங்கை ஆற்ற வேண்டும் என்று திருவாட்டி புனிதா வலியுறுத்தினார்.
பள்ளித் தேர்வுகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள், நண்பர்களுடனான உறவு போன்ற பல்வேறு அம்சங்களில் இளையர்கள் சவால்களைச் சந்திக்கின்றனர் என்பதைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார் திருவாட்டி புனிதா.
"பிள்ளைகளுடன் நல்லதோர் உறவை ஏற்படுத்திக்கொள்வதிலும் அவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதிலும் கவனம் செலுத்துவது பெற்றோருக்கும் உதவும்," என்று அவர் குறிப்பிட்டார்.
மனநலனுக்கும் குடும்பச் சூழலுக்கும் தொடர்புண்டு
சிங்கப்பூர் உட்பட ஆறு நாடுகள் தொடர்பாக இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தங்களின் மனநலனை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களாக குடும்பத்தையும் உறவுகளையும் கருதுவதாக 51% சிங்கப்பூரர்கள் தெரிவித்திருந்தனர்.
இளையர் முரசுக்கு அளித்த பேட்டியில், தன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே தனது மனநலனைப் பெரிதும் பாதிப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.
குடும்பச் சூழல் காரணமாக 14 வயதிலிருந்து தான் மன அழுத்தத்துக்கு ஆளானதாக அவர் கூறினார்.
தன்னுடைய பெற்றோரும் மனநலத்தின் முக்கியத்துவத்தை ஆரம்பத்தில் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மனநல நிபுணரை நாட போதிய பணம் இல்லாததால் இதுபோன்ற சேவைகளை இலவசமாக வழங்கும் நிறுவனங்களை அணுகி, 16வது வயதில் மனநலன் பேணுவதற்கான அந்த முதல் படியை அவர் எடுத்து வைத்தார்.
சில மாதங்களில் தன்னுள் நிகழும் மாற்றத்தை உணர ஆரம்பித்த நிலையில் தன் தாயாரிடம் மனந்திறந்து பேசினார். அதன் பிறகு அவருடைய பெற்றோருக்கு மன உளைச்சல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. தனது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவர்கள் முயற்சி எடுத்ததைப் பார்த்துத் தான் நெகிழ்ந்து போனதாக அந்த ஆடவர் குறிப்பிட்டார்.
மனநல உதவி நாடுவதில் தவறில்லை
கவலை, பதற்றம், தனிமை போன்ற மனநலன் தொடர்பான உணர்வுகளைத் தாங்கள் அனுபவித்துள்ளதாக சிங்கப்பூரில் 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 3,336 இளையர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மூன்றில் ஒருவர் கூறியிருந்தார். மேலும், மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் 14 முதல் 16 வயது வரையிலான இளையர்களுக்கு ஏற்படக்கூடிய மனநலப் பாதிப்புகள் மேலும் கடுமையானவை என்று தெரியவந்தது.
இளையர்களுக்கு உதவும் வகையில் உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் மட்டுமின்றி மனநல சமூகப்பணி நிபுணர்களையும் உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறை வேண்டும் என்று அந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
அவ்வாறு மனநல உதவி வழங்கும் அமைப்புகளில் 'மென்டல் ஆக்ட்' என்ற லாப நோக்கற்ற சமூக அமைப்பும் ஒன்றாகும். இது மனநலச் சேவைகள் மற்றும் திட்டங்களை ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
"எங்கள் சமூக ஊடகத் தளங்கள் வழியாகவும் இளையர் இந்திய அமைப்புகள் மூலமாகவும் மன உளைச்சலால் பாதிக்கப்படும் இளையர்களை நாங்கள் அணுகுகிறோம்," என்று கூறினார் 'மென்டல் ஆக்ட்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் தேவானந்தன்.
இளையர்களுடன் உரையாடியதன்வழி, இன்னமும் சில குடும்பங்களில் மனநலம் பற்றிய தவறான சிந்தனை இருப்பதைத் உணர்ந்ததாகக் கூறினார் தேவானந்தன்.
இதனால் இளையர்கள் தகுந்த உதவியை நாடத் தயங்கலாம். இவ்வாறு உதவி நாடத் தயங்கும் இளையர்களுக்கு வெளிப்புற நடையுடன் கூடிய ஆலோசனை சிகிச்சை அமர்வுகள், ஆதரவு தருவதற்காக இல்ல வருகைகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். 'கஃபே' போன்ற இளையர்கள் விரும்பும் இடங்களில் அமர்வுகள் நடைபெறும் என்றார் தேவானந்தன்.
விழிப்புணர்வு போதாது
மனநலம் பற்றிய தவறான சிந்தனைகளை மாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கூறும் ஊடகத்துறைத் தலைமை எழுத்தாளரும் இயக்குநருமான 27 வயது ஸ்டேசி தன்யா ஷாமினி, 12வது வயதிலிருந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியவர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக 'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரம்' (பிசிஓஎஸ்) பிரச்சினையுடன் போராடி வரும் இவர், 12 வயதிலிருந்தே 'எண்டோமெட்ரியோஸிஸ்' (endometriosis) பிரச்சினைக்கும் ஆளானவர்.
மருத்துவக் காரணங்களால் 14 வயதிலிருந்தே கருத்தடை மாத்திரைகளை எடுத்துவந்தார். அதன் விளைவாக அவருக்கு உடல் எடை அதிகரித்தது. உடல் எடை குறித்த விமர்சனங்கள் இவரை மிகவும் புண்படுத்தின. மேலும், பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற காலத்தில் உடல்நிலை காரணமாக அவருக்கு ஏற்பட்ட முகப்பரு பிரச்சினையாலும் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளானார் ஸ்டேசி.
"நான் எதிர்நோக்கிய சவால்களைச் சமாளிக்க, மனநல உதவி நாடியது எனக்குப் பெரிதும் உதவியது. மன அழுத்தம் என்னை முடக்கிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்," என்று கூறினார் ஸ்டேசி.
உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள ஸ்டேசி, இளையர்களுக்கு மனநல ஆதரவளிப்பதில் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்றார்.
"மனநலப் பிரச்சினைகளுக்குத் தங்களின் பிள்ளை ஆளாகியுள்ளதன் அறிகுறிகளைப் பெற்றோர் கண்டறியவும் அவற்றைச் சமாளிக்கவும் பயிலரங்குகளும் கருத்தரங்குகளும் மேலும் அதிகம் தேவை," என்றார் ஸ்டேசி.
சிங்கப்பூர் அபய ஆலோசனைச்
சங்கம் (SOS): 1767
வாட்ஸ்அப் தொடர்பு: 9151 1767
Tinkle Friend (7-12 வயது)
1800 2744 788
மனநலக் கழகத்தின்
'சேட்' சேவை (13-25 வயது)
chatline@mentalhealth.sg
மனநல உள்ளாய்வு
நிலையத்திற்கான (SAMH)
சிங்கப்பூர் சங்கம்: 1800 283 7019
SAMH SAY-IT:
9179 4087 / 9179 4085 அல்லது
samhsayit@samhealth.org.sg
Club HEAL: 6899 3463
TOUCHLINE: 1800 377 2252
அல்லது hello@help123.sg
சமுதாய, குடும்ப மேம்பாட்டு
அமைச்சின் குடும்பச் சேவை
நிலையங்களையும் உதவிக்கு
நாடலாம்