ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட வெளியே சென்ற திரு சியா குடும்பத்துக்கு அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறியது.
ராஃப்பிள்ஸ் பிளேசில் உள்ள யுஓபி கட்டடத்துக்கு தனது மனைவி, மகள் ஆகியோருடன் திரு சியா சென்றிருந்தார். 60வது மாடியில் உள்ள உணவகத்தை அடைய மின்தூக்கியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்தூக்கி நின்றது. நான்காவது மாடியில் நின்ற மின்தூக்கி இரண்டாவது மாடிக்கு வேகமாக இறங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மின்தூக்கியில் உள்ள எச்சரிக்கை மணியைப் பலமுறை அழுத்தியும் பதில் கிடைக்காததால் மின்தூக்கியில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அவர் அழைத்துள்ளார். பழுதுபார்க்க ஒருவர் அனுப்பிவைக்கப்படுவார் என்று திரு சியாயிடம் கூறப்பட்டது. 20 நிமிடங்கள் கழித்து பழுதுபார்ப்பவருக்கு கோளாற்றைச் சரிசெய்ய தெரியவில்லை என் திரு சியாவிடம் தெரிவிக்கப்பட்டது.
மின்தூக்கியில் விளக்குகள் இருந்தாலும், குளிர்சாதன வசதி தடைப்பட்டிருந்ததாக திரு சியா கூறினார். 7.30 மணியவளவில் காவல்துறைக்கு அவர் அழைத்து உதவி நாடினார். சிறிது நிமிடங்களில் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அங்கு வந்தனர்.
மின்தூக்கி கூரையில் உள்ள ஒரு வழியாக திரு சியாவும் அவரது குடும்பத்தாரும் வெளியேறினர். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து கட்டட மேலாளர் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுகொண்டதாக திரு சியா குறிப்பிட்டார்.