வாராந்திர டெங்கி சம்பவங்கள் கடந்த மே மாதம் உச்சத்தைத் தொட்ட பிறகு, 70 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்றும் இருப்பினும் குடியிருப்பாளர்கள் இவ்வாடின் இரண்டாவது முறையாக டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பைத் தடுக்க தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் தெரிவித்துள்ளார்.
ஆகக் கடைசி டெங்கி நிலவரம் பற்றி நேற்று தெரிவித்த திரு பே, டெங்கி அதிகமாகப் பரவிய குழுமங்களில் 95% டெங்கி அற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
கடந்த வாரம் 427 டெங்கி சம்பவங்கள் பதிவாகின என்று நேற்று குறிப்பிட்ட தேசிய சுற்றுப்புற வாரியம், அது அதற்கு முந்திய வாரத்தை விட 46 சம்பவங்கள் குறைவு என்றும் கூறியது.
அதையும் சேர்த்து அக்டோபர் 7ஆம் தேதி வரையிலான டெங்கி சம்பவங்கள் 28,500ஆக பதிவாகின. இவ்வாண்டு டெங்கித் தொற்று காரணமாக ஒன்பது பேர் மாண்டுவிட்டனர் என்றும் கடந்த ஆண்டு இதன் தொடர்பில் மாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்து மட்டுமே என்றும் சுட்டியது.
மேலும் அக்டோபர் 7ஆம் தேதி வரை 142 டெங்கி குழுமங்கள் சிங்கப்பூரில் இருந்ததாகவும் அது அதற்கு முந்திய வாரத்தின் எண்ணிக்கையான 148ஐவிட ஆறு குழுமங்கள் குறைவு என்றும் விவரித்தது. மே மாதம், வாராந்திர டெங்கி சம்பவங்கள் 1,500 என்று பதிவாகின.
சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்களின் அதிகரிப்பைத் தடுக்க தேசிய சுற்றுப்புற வாரியம், கடந்த மார்ச் 30ஆம் தேதி தேசிய டெங்கி தடுப்பு இயக்கத்தைத் தொடங்கியது. அதன்படி, கொசு இனப்பெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் டெங்கி எச்சரிக்கைப் பதாகைகளை வைத்து கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு நினைவூட்டியது.
கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க, சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கும் மேலாக, வோல்பாக்கியா-ஏடிஸ் ஆண் கொசுக்களை எட்டு இடங்களில் வாரியம் விடுவித்தது. அத்துடன் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 13 வோல்பாக்கியா இடங்கள் உள்ளன.
வோல்பாக்கியா திட்டம் வோல்பாக்கியா கிருமியை நுண்ணுயிரியைக் கொண்டுள்ள வோல்பாக்கியா கொசுக்களை விடுவிப்பது. அந்தக் கொசுக்கள் ஏடிஸ் கொசுக்களுடன் இணை சேரும்போது, அது ஏடிஸ் கொசு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க விடாமல் செய்துவிடும்.
மெக்பர்சன் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் திரு பே, நேற்று வோல்பாக்கியா ஆண் கொசுக்களை விடுவித்தார்.
பொங்கோல், செங்காங் உட்பட எட்டு புதிய வோல்பாக்கியா கொசுக்கள் விடுவிக்கப்படும் இடங்களில் மெக்பர்சனும் ஒன்று.
வோல்பாக்கியா திட்டம் சிங்கப்பூரில் உள்ள 31 விழுக்காட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகக் கடைசியாக மேலும் 1,400 வீவக புளோக்குகளுக்கு திட்டம் விரிவடைந்துள்ளது.
"வோல்பாக்கியா ஆண் கொசுக்களின் இனப்பெருக்கம் முதலில் இரண்டு மில்லியனாக இருந்தது. இப்போது அது வாரத்துக்கு ஐந்து மில்லியனுக்குப் பெருகி விட்டது.
"இது தற்போதுள்ள இடங்களுக்குப் போதுமானது. ஆனால் சிங்கப்பூர் முழுவதையும் டெங்கியிலிருந்து பாதுகாக்க நமக்கு இன்னும் அதிக அளவிலான வோல்பாக்கியா ஆண் கொசுக்கள் தேவை.
"வாரியமும் அதன் பங்காளிகளும் அணுக்கமாகப் பணியாற்றி வோல்பாக்கியா ஆண் கொசுக்கள் இனப் பெருக்கத்தை அதிகரிக்க புதிய புத்தாக்க வழிகளை ஆராய்கின்றன," என்றும் திரு பே தெரிவித்தார்.