அதிகமான ஜோடிகள் இணையச் சந்திப்புத் தளங்கள் அல்லது செயலித் தளங்கள் மூலம் சந்திக்கின்றனர் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது என தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு நேற்று தெரிவித்தது.
ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒற்றையர் அல்லது தற்போது சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள். இணையம் மூலம் சந்தித்தவர்களின் விகிதம் 2012ல் இருந்து 7%லிருந்து கடந்த ஆண்டில் 29%க்கு உயர்ந்தது. பள்ளிகளில், நண்பர்கள் மூலம் வேலையிடத்தில் சந்திப்பது போன்றவை மற்ற வழிகள்.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை நடத்தப்பட்ட திருமணம் மற்றும் பெற்றோராகுதல் ஆய்வில் 2,848 ஒற்றையர்கள் பங்கேற்றனர். அதாவது அவர்கள் திருமணமே செய்துகொள்ளாதவர்கள். மேலும் ஆய்வில் 3,017 மணமானவர்களும் பங்கேற்றனர். அவர்கள் 21 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்.
ஆய்வில் பங்கேற்ற ஒற்றையர்களில் 50 விழுக்காட்டினர் தற்போது எந்தச் சந்திப்புகளிலும் ஈடுபட வில்லை. இவர்களில் 38 விழுக்காட்டினர் இதுவரை எவ்வித சந்திப்புகளிலும் ஈடுபட்டதில்லை.
குறிப்பிட்ட ஒரு சமூக வட்டத்துக்குள் இருப்பதுதான் (58%) சந்திப்புகளில் ஈடுபடாமல் இருப்பதற்கு முதன்மை காரணம். வாழ்க்கைத் துணையைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் இல்லாதது (57%), வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கலாம் (48%) போன்றவை இதர காரணங்கள். வேலை அல்லது கல்வியைத் தொடர்வது, காதல் உறவை ஏற்படுத்த சிரமப்படுதல் ஆகியவை மற்றக் காரணங்கள்.
அதே நேரத்தில், இணையச் சந்திப்புத் தளங்கள் அல்லது செயலித் தளங்கள் மூலம் சந்திப்பது பலருக்கும் பிடித்துள்ளது. அவ்வாறு சந்தித்தவர்கள் விகிதம் 2012ல் 19%, 2016ல் 43%, 2020ல் 58%.
சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் சந்தித்தல், நண்பர்கள், சக மாணவர்கள் மூலம் அறிமுகம் கிடைத்தல் அல்லது வேலையிட சகாக்கள் மூலம் அறிமுகம் கிடைத்தல் ஆகியவை வாழ்க்கைத் துணை கிடைக்க தாங்கள் விரும்பும் உகந்த வழிகள் என்று பலரும் கூறுகின்றனர்.
"வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு இணையச் சந்திப்புத் தளங்கள் அல்லது செயலித் தளங் களை மக்கள் நாடுவது வழக்கமாகிவிட்டது. வேலையில் மூழ்கியிருப்போர் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு இணையச் சந்திப்புத் தளங்கள் அல்லது செயலித் தளங்களை நாடுவதையே அதிகம் விரும்புகின்றனர்," என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வகத்தின் தலைமை ஆய்வாளர் மேத்யூ மேத்யூஸ் தெரிவித்தார்.
இருப்பினும், தொழில்நுட்பத்தைச் சார்ந்த சந்திப்புகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை. அதில் சில போதா மைகள் உள்ளன.
நேரடியாகச் சந்திப்பதையே சிலர் இன்னும் சிலர் விரும்புகின்றனர் என்றும் திரு மேத்யூஸ் விளக்கினார்.

