மலேசியாவிலிருந்து பிராய்லர் உயிர்க் கோழிகளுக்கு சிங்கப்பூரர்கள் இவ்வார இறுதிவரை காத்திருக்க நேரலாம். கோழி ஏற்றுமதி தடை இன்று நீக்கப்படுகிறது என்று நேற்று முன்தினம் மலேசிய அமைப்புகள் அறிவித்தன.
ஆனால், அந்தக் கோழிகள் இவ்வார இறுதியில்தான் இங்கு வந்து சேரும் என்று உள்ளூர் கோழி இறக்குமதியாளர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து நேற்று பேசிய மலேசியாவின் வேளாண், உணவுத் துறை அமைச்சர் ரோனல்ட் கியான்ட், கோழி ஏற்றுமதி தற்போதைக்குப் பாதியாகக் குறைக்கப்படும் என்றும் படிப்படியாக அந்த விகிதம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்றுமதி தடைக்கு முன் மாதத்துக்கு 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் தற்போதைய தடைக்குப் பிறகு 1.8 மில்லியன் கோழிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கியான்ட் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.

