ராஃபிள்ஸ் பிளேஸ் யுஓபி பிளாசாவில் உள்ள ஒரு மின்தூக்கியினுள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
அன்று மாலை 6.30 மணியளவில் அக்கட்டடத்தின் 60வது மாடியில் இருந்த சி சுவான் டோ ஹுவா உணவகத்திற்குத் தம் மனைவி, மகளுடன் செல்வதற்காக அங்கு உள்ள ஒரு மின்தூக்கியில் ஏறினார் 74 வயதான திரு சியா.
திடீரென நான்காவது தளத்தில் நின்றுபோன அந்த மின்தூக்கி, பின்னர் வேகமாக இரு தளங்கள் கீழிறங்கி இரண்டாம் தளத்தில் நின்றுவிட்டது.
இதனையடுத்து, உதவிகோரி பலமுறை அபாயமணியை அழுத்தினார் ஓய்வுபெற்ற சொத்துச் சந்தை மேம்பாட்டாளரான திரு சியா. எந்தப் பதிலும் கிட்டாது போகவே, அம்மின்தூக்கியில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அவர் தொடர்புகொண்டார்.
பழுதுபார்ப்புத் தொழில்நுட்பர்இருவர் வந்தும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை.
அதன்பின், இரவு 7.30 மணியளவில் காவல்துறையைத் தொடர்புகொண்டார் திரு சியா.
சில நிமிடங்களில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு வந்துசேர்ந்தனர். மின்தூக்கியின் பக்கவாட்டுக் கதவை அவர்கள் திறக்க முயன்றனர். ஆனாலும், அது முடியாமல் போனது.
பின்னர் மின்தூக்கியின் மேல் இருக்கும் கதவைத் திறந்து, அதன்வழியாக திரு சியாவும் அவரின் குடும்பத்தினரும் இன்னொரு மின்தூக்கிக்கு வர குடிமைத் தற்காப்புப் படையினர் உதவினர்.
கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது 10 மணிக்கு அவர்கள் வெளியே வந்தனர். சம்பவத்திற்காகக் கட்டட மேலாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக திரு சியா சொன்னார்.
அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.