சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் உள்ள பயணிகள் புறப்பாட்டுப் பகுதி புதுப்பிக்கப்பட்டு நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியது.
நேற்று அங்கு சென்ற பயணி
களுக்கு இன்ப அதிர்ச்சி காத்
திருந்தது.
சிங்கப்பூரிலிருந்து வெளிநாடு களுக்குப் புறப்பட்டுச் செல்ல அதிகாலை 5 மணிக்கெல்லாம் முனையம் 2ல் இருந்த பயணிகளை நீலம், வெள்ளை, தங்க நிற பலூன்களால் வடிவமைக்கப்பட்ட வாயில் வளைவு வரவேற்றது.
ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த சிறு கூடங்களிலிருந்து இலவச காப்பியும் நொறுக்குத் தீனிகளும் வழங்கப்பட்டன.
சாங்கி விமான நிலையத்தின் விமான வடிவிலான சின்னமான மேக்சுடன் பயணிகள் குடும்பமாக நின்று மகிழ்ச்சியுடன் படம்
எடுத்துக்கொண்டனர்.
அங்கிருந்த சிறுவர்கள் கவனிக்காதபோது அவர்களது பயணப் பெட்டிகளை மேக்ஸ் எடுத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாகப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்ததை அடுத்து 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் முனையம் 2 மற்றும் முனையம் 4ல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
தற்போது சாங்கி விமான நிலையத்தின் அனைத்து முனையங்களும் இயங்குகின்றன.
சாங்கி விமான நிலையம் கையாளும் வருடாந்திர பயணிகள் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையைப் போல ஏறத்தாழ 70 மில்லி
யனுக்குத் திரும்பியுள்ளது.
முனையம் 4 கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. முனையம் 2ல் உள்ள பயணிகள் வரவேற்புப் பகுதி கடந்த மே மாதம் மீண்டும் தொடங்கியது.
ஆண்டிறுதியில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முனையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஹாங்காங், ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் தங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்
பதும் அதற்கு முக்கிய காரணம்.
நேற்று முனையம் 2 மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து இரண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கும் பேங்காக்கிற்கும் புறப்பட்டுச் சென்றன.
முனையம் 2லிருந்து நேற்று மொத்தம் 17 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
முனையம் 2ல் நேற்று மொத்தம் 25 கடைகள் திறக்கப்பட்டன.
பயணிகளுக்கான இடங்களில் புதுப்பிக்கப்பட்ட கடைகளுக்குச் சென்று பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக வர்த்தக ஆலோசகரான 39 வயது குருராஜா கூறினார்.
வேலை அனுமதி அட்டைதாரரான திரு குருராஜா தமது மனைவி, இரண்டு மகள்களுடன் அடிக்கடி தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்குப் பயணம் மேற்கொள்பவர்.
"முனையம் 2ல் உள்ள அனைத்து அம்சங்களும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றன. இது எனது பயண அனுபவத்தை மேலும் மெருகூட்டுகிறது," என்றார் அவர்.
முனையம் 2ன் வடக்குப் பகுதி யில் புதுப்பிப்புப் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. அவை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. முனையம் 2 கையாளும் வருடாந்திர பயணிகள் எண்ணிக்கை 23 மில்லியனிலிருந்து 28 மில்லியனுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கடந்த இரண்டு ஆண்டு
களாக சாங்கி விமான நிலையம் பல சவால்களை எதிர்நோக்கியது. எனவே, தற்போது கூடுதல் பயணிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
"மீள்திறனுடன் செயல்பட்ட விமான நிலைய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்," என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் விமான நிலைய நிர்வாகப் பிரிவின் நிர்வாக உதவித் தலைவர் திரு டான் லாய் டெக் தெரிவித்தார்.

