டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக உயர் கல்விநிலையப் பட்டியல் 2023 வெளியிடப்பட்டு உள்ளது.
முந்திய ஆண்டு பட்டியலில் 21வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இப்போது 19வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பட்டியலில் 10 இடங்கள் மேம்பட்டு இப்போது 36வது இடத்தைப் பிடித்துள்ளது.
டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக உயர் கல்விநிலையப் பட்டியல் கடந்த 19 ஆண்டுகளாக வெளி யிடப்பட்டு வருகிறது.
அந்தப் பட்டியலில் இந்த ஆண்டில் 102 நாடுகள், வட்டாரங்களில் செயல்படும் 1,799 பல்கலைக்கழகங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
இது ஒரு சாதனையாக இருக்கிறது. இதுவரை இந்த அளவுக்கு ஆக அதிக பல்கலைக்கழகங்களைப் பட்டியல் உள்ளடக்கியதில்லை. சென்ற ஆண்டில்கூட 1,662 பல்கலைக்கழகங்களைத்தான் ஒப்பிட்டு இந்தப் பட்டியல் முடிவுகளை அறிவித்து இருந்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உலகில் தலைசிறந்த முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்போது திகழ்கிறது.
இந்த உயர்கல்வி நிலையம் 2011ஆம் ஆண்டு முதல் தலைசிறந்த முதல் 50 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வருகிறது.
அதேபோல் நன்யாங் பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டு முதல்தலைசிறந்த முதல் 50 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக உள்ளது.
உலகிலேயே ஆகக் சிறந்த பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபர்ட்தான் என்று பட்டியல் அறிவிக்கிறது.
இந்தக் கல்வி நிலையம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையும் அமெரிக்கா வின் ஸ்டான்ஃபர்ட் பல்கலையும் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இந்த நான்கு பல்கலைக்கழகங்களும் சென்ற ஆண்டின் உலகின் தலைசிறந்த முதல் ஐந்து பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றவை.
ஆய்வு வெளியீடுகள், மேற்கோள்கள், கிட்டத்தட்ட 40,000 கருத்துகளுடன் கூடிய கல்வித்துறை நற்பெயர் ஆய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், ஊழியர், மாணவர்கள் வளம், தொழில்துறை வருவாய் போன்ற கூடுதல் தகவல்களும் கருத்தில்கொள்ளப்படும். சிங்கப்பூரின் இதர நான்கு பல்கலைக்கழகங்களும் வரிசைப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, இந்த ஆண்டு பட்டியல் பற்றி கருத்து தெரிவித்த டைம்ஸ் உயர் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியான பிஃல் பேட்டி, பட்டியலில் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் மேம்பட்டு இருப்பது, சிங்கப்பூரின் மனம் கவரும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

