நலமிக்க மக்கள், கட்டுப்படியாகும் செலவு இரண்டிற்கும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி'
நாட்பட்ட நோய்களால் ஏற்படக்கூடிய பொருளியல் சுமைகளைக் குறைக்க தன்னால் ஆன அனைத்தையும் சிங்கப்பூர் செய்து இருக்கிறது. இருந்தாலும் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் சுகாதாரப் பராமரிப்புச் செலவு கூடுகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
இதன் காரணமாகத்தான் நோய் வராமல் தடுக்கும் அணுகுமுறைக்கு நம்முடைய உத்தியை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களை, நீண்டகாலத்திற்கு உடல்நலத்துடன் வைத்திருப்பதற்காக சுகாதார அமைச்சு 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' என்ற புதிய செயல்திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.
அதிகரிக்கும் செலவைக் குறைப்பதில் இந்தத் திட்டம் மிக முக்கியமான ஒரு முயற்சி என்று அமைச்சர் தெரிவித்தார்.
நோய்களால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்க ஆன அனைத்தையும் செய்ய நாம் முயல்வோம் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் கண்காட்சி மையத்தில் சிங்கப்பூர் சுகாதார உயிரியல் மருத்துவப் பேரவைக் கூட்டத்தில் நேற்று அமைச்சர் முக்கிய உரையாற்றினார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் அந்த இரண்டு நாள் வருடாந்திர கூட்டத்தில் 1,300 சுகாதாரப் பராமரிப்புத் துறை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் நீரிழிவு நோய் பாதிப்பு விகிதம் தொடர்ந்து சீராக இருந்து வருகிறது. அந்த நோய்க்கு எதிரான தேசிய போராட்டத்தில் இடம்பெற்ற பல முயற்சிகளே இதற்கான காரணம் என்று அமைச்சர் விளக்கினார்.
அதேவேளையில், ரத்த அழுத்தம், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பு போன்ற இதர பிரச்சினைகள் பெரியவர்களிடையே இன்னமும் அதிகரித்தபடியே இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நோய்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் பல முயற்சிகளை நாம் எடுத்து வந்தால் வாழ்வின் பிற்பகுதியில் கடுமையான நோய்களைத் தவிர்த்துவிடலாம்.
இதுவே மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி செயல்திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
அந்தச் செயல்திட்டம் மக்கள், தங்கள் உடல்நலத்திற்குத் தாங்களே பொறுப்பேற்க வகைசெய்கிறது என்று கூறிய அமைச்சர், முன்பைவிட அதிகமானவர்கள் உடல்நலத்திற்கு ஏற்ற குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பானம் பக்கம் திரும்பி உள்ளதைச் சுட்டினார்.
நல்ல உடல்நலனுக்கு வெகுமதிகளுடன்கூடிய உடற்பயிற்சி முக்கியம். விளையாட்டு மூலம் உடற்பயிற்சியை ஊக்குவிப்பது, நலமிக்க வாழ்வை மேலும் கவர்ச்சி கரமான ஒன்றாக ஆக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி செயல்திட்டத்தில் குடும்ப மருத்துவர்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள். முதியவர்கள் ஒரு குடும்ப மருத்துவருடன் காலக்கிரம முறைப்படி தொடர்ந்து தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்று, நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நோய்களைத் தவிர்த்துக்கொள்ள அந்தத் திட்டம் ஊக்குவிக்கும்.
அமைச்சு அடுத்த ஆண்டு முதல் 60 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களுக்கு மானியம் வழங்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த வயது வரம்பு குறையும்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி செயல்திட்டம் நோய்களைத் தவிர்த்துக்கொள்வதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தி மக்களின் உடல்நலனை மேம்படுத்தும். இதன்மூலம் நீண்டகாலப் போக்கில் சுமைகள் குறையும். மக்களுக்கு நோய் வேதனைகளும் குறையும்.
சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாடும் பொருளியல் ரீதியில் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருந்து வரும் என்று அமைச்சர் தெரி வித்தார்.

