தன்னுடைய தாய்க்கும் மனைவிக்கும் கொவிட்-19 ஆதரவு மானி யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு பேரின் வேலை பற்றி பொய் சொல்லி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஒருவர் ஏமாற்றினார்.
இப்படி ஏமாற்றி அவர், மொத்தம் $4,800 பெற்றார். இந்தக் குற்றத்திற்காக ஹுவாங் வெய்மிங், 38, என்ற அந்த ஆடவருக்கு 19 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏமாற்றியது, ஏமாற்ற முயன்றது தொடர்பிலான மூன்று குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவர், தில்லுமுல்லுகள் இடம்பெற்றிருந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார் என்பது தெரியவந்ததை அடுத்து சென்ற ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அது பற்றி காவல்துறையிடம் அமைச்சு புகார் செய்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக பொருளியல், சமூகப் பாதிப்புகளுக்கு உள்ளான சிங்கப்பூர்வாசிகளுக்கு உதவுவதற்காக கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டம் நடப்புக்கு வந்தது.
2020 ஜனவரி 23க்குப் பிறகு ஒருவருக்கு ஆட்குறைப்பு மூலம் அல்லது உடன்பாடு முடிவடைந்தது மூலம் வேலை போய் இருந்தால் அவர் மானியத்தைப் பெறலாம்.

