சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரை
நோயாளியின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் சிறந்த முறையில் பேணும் நோக்கில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளது.
ஆற்றல்மிக்க ஒழுங்குமுறைத் திட்டத்தின்கீழ் உரிமம் பெற்றோரிடம் இருந்து நோயாளிகள் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுப் பயனடையவும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் குறித்த விளம்பரங்களிலும் சேவை வழங்கும் வழிகளிலும் மிகுந்த தெளிவிற்கும் வெளிப்படைத்தன்மைக்கும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் வழிவகை செய்யும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்தத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதாக, சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சட்டத்தின்கீழ் உரிமம் பெறாத சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் தொடர்பில் விளம்பரம் செய்வதில் மாற்றம் செய்ய அமைச்சு பரிந்துரைத்து இருக்கிறது.
பதிவுசெய்யப்படாத சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள், சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் தொடர்பான தங்களது விளம்பரங்களில் 'மருத்துவர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினால், தங்களது கல்வித்தகுதிகளையும் நற்சான்றுகளையும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். இதன்மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவது தவிர்க்கப்படும்.
சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்றவர்கள், நிபுணத்துவ மருத்துவர் எவரையும் தாம் பணியமர்த்தவில்லை எனில் அத்தகைய நிபுணத்துவ மருத்துவ சேவை தொடர்பான சொற்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது அமைச்சு முன்மொழிந்துள்ள இரண்டாவது திருத்தம்.
எடுத்துக்காட்டாக, நரம்பியல் வல்லுநர் எவரும் பணிபுரியவில்லை எனில் அந்த மருந்தகத்தை 'நரம்பியல் மருந்தகம்' என அழைக்க முடியாது.
மூன்றாவது திருத்தமானது, சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்கலில் வெவ்வேறு வழிமுறைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பானது. இதன்மூலம் பொதுமக்கள் எந்தெந்த வழிகளில் தாங்கள் சுகாதாரப் பராமரிப்பு சேவையைப் பெற முடியும் என மக்கள் அறிந்துகொள்ளலாம் என்று அமைச்சு கூறியது.
குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு ஓர் அனுமதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது நான்காவது திருத்தம். மருத்துவ நிர்வாக அதிகாரிகளை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக, பணியாளரின் பின்னணியைச் சரிபார்த்து உறுதிசெய்வதைச் செம்மைப்படுத்த அமைச்சு முன்மொழிந்துள்ளது.
இறுதியாக, நோயாளிப் பாதுகாப்பு தொடர்பிலான அவசர விவகாரங்களுக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு முன்மொழிந்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். அடுத்த மாதம் 11ஆம் தேதிக்குள் www.hcsa.sg என்ற இணையத்தளம் வழியாக அவர்கள் கருத்து கூறலாம்.
சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களும் இனிமேல் உரிமம் பெற திட்டமிட்டுள்ளோரும் புதிய திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

