உமிழ்வுச் சோதனை முடிவுகளில் நிலவும் மாறுபாடு காரணமாக அங்கீகரிக்கப்பட்ட விநியோக நிறுவனங்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட ஏறக்குறைய புதிய நிஸான் என்வி200 வேன்கள் விற்கப்பட முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
வணிக வாகன கரியமில வாயு வெளியேற்றத் திட்டத்தில் (சிவிஇஎஸ்) 'பி' தரநிலைச் சான்றிதழை அந்த வாகனங்களால் பெற முடியவில்லை என்று 'பிரைம்' மோட்டார் குழுமத்தின் தலைவர் நியோ நாம் ஹெங் கூறினார்.
அத்தரநிலையைப் பெற்றால், அவ்வாகனங்களுக்குத் தலா $10,000 வரிச்சலுகை கிடைக்கும்.
ஆனால், அவை 'சி' தரநிலையைப் பெற்றுள்ளன. அதனால், அவை ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக $10,000 வரி செலுத்த வேண்டியுள்ளது.
"அவ்வேன்கள் ஜப்பானிலுள்ள ஓர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன. அங்கு அவை 'பி' தரநிலைக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தன. ஆனால், அவை இங்குள்ள 'பி' தரநிலைக்கான சோதனையில் தேறவில்லை," என்று திரு நியோ சொன்னார்.
அவ்வாகனத்தை ஜப்பானில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தும்படி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.

