குறுக்குத் தீவு ரயில்பாதையில் இடம்பெறும் மாஜு நிலையத்தை கிளமெண்டி காட்டுப்பகுதிக்குள் அமைப்பது என முதலில் வகுக்கப்பட்ட திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
இப்போது, அந்நிலையத்தை கிளமெண்டி சாலைக்குக் கீழே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறுக்குத் தீவு ரயில்பாதையின் இரண்டாம் கட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் காட்டுப்பகுதியின் அளவைக் குறைக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிங் ஆல்பர்ட் பார்க் நிலையத்தில் இருந்து மாஜு நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதை வழியும் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு விலங்குகள் அதிகம் வசிக்கும், சுற்றுச்சூழல் சார்ந்த முக்கியமான பகுதி என்பதால், அதன்மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இம்மாற்றம் இடம்பெற இருக்கிறது.
பிரைட்ஹில்லுக்கும் கிளமெண்டிக்கும் இடையே, குறுக்குத் தீவு ரயில்பாதையில் அமையும் நிலையங்களின் கட்டுமானம் மற்றும் செயல்பாடு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நடவடிக்கைகள் இடம்பெறவில்லை எனில், குறுக்குத் தீவு ரயில்பாதையின் இரண்டாம் கட்டமானது, அதனையொட்டிய காட்டுப்பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் புக்கிட் தீமா குதிரைப்பந்தய மன்றப் பகுதியில் இடம்பெறும் குறுக்குத் தீவு ரயில்பாதைக் கட்டுமானப் பணிகள் அவ்விடத்தின் மரபுடைமையைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இரு முக்கியப் பார்வையாளர் பகுதி உட்பட பல கட்டடங்கள் அதன் வரலாற்றைத் தொடர்ந்து பேண உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

