$11 மி. கையாடிய முன்னாள் நிர்வாக இயக்குநர்மீது குற்றச்சாட்டு
நொடித்துப்போன சொகுசு ஜெட் நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாக இயக்குநரான 34 வயது கெசிடி ஜோஃப்ரி ஓவன், நிறுவனத்திடமிருந்து $11 மில்லியனுக்கு மேலான தொகையைக் கையாடியதன் தொடர்பில் நேற்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. 'ஸெட்டா ஜெட்' நிறுவன நிர்வாக இயக்குநராக 2015 முதல் 2017 வரை ஆஸ்திரேலியரான ஓவன் இருந்ததாகக் காவல்துறை நேற்று அறிக்கை விடுத்தது. வழக்கு தொடர்பில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜூன் டேங் கிம் சூ மீதும் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆபாசக் காட்சிகளைப் பதிவேற்றம் செய்ததற்காக சிறை, அபராதம்
சந்தா அடிப்படையிலான 'ஒன்லிஃபேன்ஸ்' இணையத்தளத்தின்வழி ஆபாசக் காட்சிகளை அனுப்பியதுடன் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து தன் இணையக் கணக்கைப் பயன்படுத்தியதற்காக டைடஸ் லோ கேய்ட் (படம்) என்ற 22 வயது இணையப் படைப்பாளிக்கு நேற்று மூன்று வாரச் சிறையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன. காவல்துறை ஆணையை மீறி தனது 'ஒன்லிஃபேன்ஸ்' கணக்கைப் பயன்படுத்தியதால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பாலியல் செயலில் லோ ஈடுபடுவதாகக் காட்டும் காணொளி ஒன்றை 12 வயது சிறுமி ஒருவர் தன் கைபேசியில் பெற்றதை அடுத்து அதையறிந்த சிறுமியின் உறவினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். விசாரணை முடியும்வரை லோ தன் கணக்கைப் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தும் இருமுறை அவர்களின் உத்தரவை லோ மீறி, ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் பதிவேற்றம் செய்தார்.
இணைய ஊடுருவல் சம்பவம்:
'கேஸ்' அதிகாரிகளாக ஆள்மாறாட்டம்
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (கேஸ்) மின்னஞ்சல் கட்டமைப்பை ஊடுருவியதுடன் சங்க அதிகாரிகளாக மோசடிப் பேர்வழிகள் பாசாங்கு செய்து 5,000க்கும் மேற்பட்டோருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியதாகப் புகார்கள் கிடைத்துள்ளன. இழப்பீட்டுத் தொகைக்குத் தகுதிபெற, கட்டணப் பரிவர்த்தனைகளைப் பயனீட்டாளர்கள் செய்தாக வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பப்பட்டதன் தொடர்பில் கடந்த சனிக்கிழமை முதல் தங்களுக்குப் புகார்கள் கிடைத்து வருவதாக 'கேஸ்' தெரிவித்தது.
சங்கத்தின் இரு மின்னஞ்சல் கட்டமைப்புகளிலிருந்து மொத்தம் 5,095 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேரடி 'சேட்' சேவைவழி பயனீட்டாளர்கள் உரையாடி, தங்களின் புகார்கள் தொடர்பில் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்காக வங்கிப் பங்காளிகளை அணுகி ஒருசில கட்டணப் பரிவர்த்தனைகளைச் செய்தாக வேண்டும் என்று அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டதாக அறியப்படுகிறது. மின்னஞ்சல் அல்லது நேரடி 'சேட்' சேவைவழி பயனீட்டாளர்களை வேறு இணையத்தளத்திற்கு அனுப்பி வங்கி விவரங்களை 'கேஸ்' கேட்டறிவது இல்லை என்று அமைப்பு நேற்று முன்தினம் தெளிவுபடுத்தியது.

