தனது டாக்சியின் சன்னலை மேலே ஏற்றி, போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவரின் கையைச் சிக்கவைத்ததுடன் சிறிது தூரத்திற்கு அதிகாரியைச் சாலையில் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படும் 69 வயது டாக்சி ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமையன்று கைதானார்.
ஹாலந்து ரோடு வட்டாரத்தில் ரோந்துப் பணியில் இருந்த 34 வயது அதிகாரி, வாகனம் ஓட்டியவாறு டாக்சி ஓட்டுநர் தனது கைபேசியைப் பயன்படுத்தியதைப் பார்த்துவிட்டார்.
வாகனத்தை நிறுத்துமாறு டாக்சி ஓட்டுநரிடம் அதிகாரி கையசைத்தும் ஓட்டுநர் தொடர்ந்து ஓட்டியதாகக் காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர். அதிகாரி தனது மோட்டார்சைக்கிளில் டாக்சியைப் பின்தொடர்ந்து சென்று ஃபேரர் ரோட்டருகே நிறுத்த முயன்றார். அதிகாரியுடன் ஒத்துழைக்காமல் டாக்சி ஓட்டுநர் தன் விவரங்களைத் தெரியப்படுத்த மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
டாக்சி ஓட்டுநர் சென்றுவிடுவார் என்றெண்ணிய அதிகாரி, வாகனத்தை நிறுத்துவதற்காக தம் கையை உள்ளே விட்டார்.
ஆனால், அதிகாரி தம் கையை மீட்பதற்குள் டாக்சி ஓட்டுநர் சன்னலை மேலே ஏற்றியதுடன் வாகனத்தை ஓட்டத் தொடங்கிவிட்டார்.
இதனால், சிறிது தூரத்திற்கு அதிகாரி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திச் சன்னலையும் இறக்கிவிட்டார்.
அரசாங்க அதிகாரி தம் கடமையைச் செய்ய விடாமல் தடுத்து வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கையில் ஏற்பட்ட காயத்திற்காக அதிகாரி மருத்துவமனையில் வெளிநோயாளி சிகிச்சை பெற்றார்.

