டிசம்பர் மாத விடுமுறையின்போது சிங்கப்பூரிலிருந்து வெளிநாடு செல்வதற்கான விமானப் பயணக் கட்டணங்கள் 78 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. பெருந்தொற்றுக்கு முன்னர் பள்ளி விடுமுறை காலத்தில் இருந்ததைவிட வரும் டிசம்பர் பள்ளி விடுமுறையின்போது விமானப் பயணக் கட்டணங்கள் கணிசமாகக் கூடியுள்ளதாக பயண முகவைகள் கூறுகின்றன.
தமிழ் முரசு சில விமான நிறுவன இணையத்தளங்களைக் கண்டபோது, நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சென்னை, திருச்சிராப்பள்ளி போன்ற நகர்களுக்குச் செல்ல பெரியவருக்கான ஒருவழி பயணக் கட்டணம் ஏறத்தாழ 300 வெள்ளியாக உள்ளது. அது பயணப் பெட்டி எடையும் கூடுதல் கட்டணங்களும் சேர்க்கப்படாத அடிப்படைக் கட்டணமாகும். டிசம்பர் இறுதி வாரத்தில் சிங்கப்பூர் திரும்புவதற்கான அடிப்படை ஒருவழிக் கட்டணம் சுமார் 400 வெள்ளி முதல் 450 வெள்ளி வரையாக உள்ளது.
பயணப் பெட்டி எடையுடன் கூடிய விமானச் சேவைகளில் சென்னை, திருச்சி போன்றவற்றுக்கான ஒருவழிக் கட்டணம் 420 வெள்ளிக்கு அதிகமாகவும் அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பும் கட்டணம் 500 வெள்ளி முதல் 650 வெள்ளியாகவும் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பயணக் கட்டணங்கள் 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.
விமானப் பயணக் கட்டணங்கள் கூடியதற்கு பல காரணங்கள் உள்ளன. பயணங்களுக்கான தேவை உயர்ந்துள்ளதால் கட்டணங்கள் கூடியுள்ளதாக பயண முகவைகள் தெரிவித்தன.


