செல்லப்பிராணிகளின் சுகாதாரப் பராமரிப்புக்கென அவசர சிகிச்சை மற்றும் நிபுணத்துவ சிகிச்சை வழங்கும் புதிய கால்நடை மருத்துவமனை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சிங்கப்பூரின் உரிமம் பெற்ற முதல் கால்நடை மருத்துவமனை இதுவாகும். கால்நடை அவசர, நிபுணத்துவ பிரிவுக்கான மருத்துவமனை அதாவது 'விஇஎஸ்', 2023ஆம் ஆண்டில் அதன் சேவைகளையும் மனிதவளத்தையும் மேலும் 30% அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
'விட்லி' வட்டாரத்தில் அமைந்துள்ள இப்புதிய மருத்துவமனையில் அவசரகால பராமரிப்பும் கடுமையான பாதிப்புகளுக்கான பராமரிப்பும் வழங்கப்படும்.
அத்துடன் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உண்டு. தங்கள் பராமரிப்பில் விடப்படும் விலங்குகளுக்கு ஊடுகதிர் (எக்ஸ்ரே) இயந்திரங்களும் 'எம்ஆர்ஐ' சேவைகளும் புதிய மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன.
தற்போது இந்த மருத்துவமனையில் 23 கால்நடை மருத்துவர்கள் உள்ளனர். 12,000 சதுர அடி அளவிலான இந்த மருத்துவமனை கிட்டத்தட்ட 12 நான்கறை வீவக வீடுகளுக்குச் சமம் என்று கூறப்படுகிறது. இங்கு 80 விலங்குகள் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

