வாகன விலை வரும் மாதங்களில் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலான மூன்று மாத காலத்தில் வாகன உரிமச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை குறைவதன் எதிரொலியாக இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வாகனப் பதிவு ரத்து அடிப்படையில் தற்போது மாத ஏலக்குத்தகைக்கு 3,526 சிஓஇக்கள் இருக்கும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் எண்ணிக்கை 11.4% குறையும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போதைய வாகன ஒதுக்கீட்டு விகிதத் திட்டத்தின்கீழ் வாகனப் பதிவு ரத்தாகும் வாகனங்களின் எண்ணிக்கையே, சிஓஇ எண்ணிக்கையை உறுதிசெய்கிறது.
வாகனப் பதிவு ரத்தாகும்போது அதன் சிஓஇ மீண்டும் அடுத்த மூன்று மாத காலகட்டத்தின் ஏலக்குத்தகையில் சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் ஏலக்குத்தகைக்கு முன்னதாக அடுத்த மூன்று மாதங்களுக்கான சிஓஇ ஒதுக்கீட்டு விகிதம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, தங்களின் வருடாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்காக, மோட்டார் வாகன நிறுவனத்தார் ஆண்டின் இறுதி மாதத்தில் சிஓஇ சந்தாக்களை உயர்த்த முயல்வர்.
இதற்கிடையே, சிஓஇ எண்ணிக்கை குறைப்பு எதிர்பார்க்கப்படுவதால் சந்தாக்கள் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக மூன்று மாத காலகட்டத்தின் சிஓஇ எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையில் நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை மாதம் மாற்றம் செய்திருந்தது.

