குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளி மாணவர்கள், புதிய ஆதரவுத் திட்டம் ஒன்றின்வழி தங்களின் மொழி மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்திக்கொண்டுள்ளனர்.
தேசிய கல்விக் கழகம் மேற்கொண்ட மூவாண்டு ஆய்வின்படி, 10 'மய் ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிலையங்களைச் சேர்ந்த 58 பிள்ளைகளின் நலனும் கற்றல் மேம்பாடும் 2019ஆம் ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டது.
பாலர் பள்ளி முதல் ஆண்டில் தொடங்கி 2021ல் தொடக்கநிலை ஒன்றில் படிக்கத் தொடங்கும் வரை பாலர்களின் முன்னேற்ற அளவு மதிப்பிடப்பட்டதில் அவர்களுடன் ஒத்த வயது பிள்ளைகளுக்கு நிகராக அவர்கள் தங்களின் மொழி மற்றும் அறிவாற்றல் திறன்களில் சிறந்து விளங்கினர்.
ஆண்டுக்குச் சுமார் 5,000 பாலர்களுக்கு ஆதரவு தந்து வரும் விரிவான இடையீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த ஆதரவுத் திட்டம் இடம்பெறுகிறது.
இதில் பேச்சு மற்றும் சிகிச்சை ஆதரவு, சிறு குழுக்களாக பாடம் படித்தல், சமூக உணர்வுப் பாடங்களைப் படித்தல் மற்றும் நிதி, சமூக உதவி நாடுதல் ஆகிய அம்சங்கள் அடங்கும்.
குறைந்த வருமானப் பின்னணியுடைய பிள்ளைகளுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, இதுபோன்ற திட்டம் உதவுவதாக பாலர் பள்ளி நிறுவனமான 'என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்' பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

