செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
069ffb48-d6f3-45d1-b1f5-719927c7051f
-

இந்தோனீசிய ஆகாயப் படைத்

தலைமை தளபதிக்கு உயரிய விருது

இந்தோனீசிய ஆகாயப் படையின் தலைமைத் தளபதியான 'ஏர் சீஃப் மார்ஷல்' (ஏசிஎம்) ஃபட்ஜார் பிராசெட்யோவுக்கு மதிப்புமிக்க ராணுவ விருதினை அதிபர் ஹலிமா யாக்கோப் வழங்கியுள்ளார். சிங்கப்பூர் குடியரசு மற்றும் இந்தோனீசிய ஆகாயப் படைகளுக்கிடையே தற்காப்பு உறவை வலுவாக்குவதன் தொடர்பில் கணிசமான அளவு பங்களித்ததற்காக, அவருக்கு 'மெச்சத்தக்க சேவை விருது' வழங்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற விழாவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் விருதினை ஏசிஎம் ஃபட்ஜாருக்கு வழங்கினார். தனிமனித அங்கீகாரமாக மட்டும் இவ்விருதினைத் தாம் கருதவில்லை என்று குறிப்பிட்ட ஏசிஎம் ஃபட்ஜார், இருநாட்டு தற்காப்பு ஒத்துழைப்பு அடைந்துள்ள மைல்கற்களுக்குச் சான்றாக இவ்விருது விளங்குவதாகத் தெரிவித்தார். (படம்: தற்காப்பு அமைச்சு)

எரிபொருள் நிரப்பும் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

எரிபொருள் நிரப்பக்கூடிய உலகின் ஆகப் பெரிய மையமாக சிங்கப்பூர் துறைமுகம் விளங்கும் நிலையில், கடந்த மாதம் எரிபொருள் நிரப்பிய கப்பல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஜூன் மாதத்தை அடுத்து முதன்முறையாக செப்டம்பரில் எரிபொருள் ஏறத்தாழ 4% குறைவாக, 3.97 மில்லியன் டன் அளவில் விற்பனையானதாக கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட தரவுகள்வழி தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2% குறைவான கப்பல்கள், அதாவது 3,155 கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பின என்றும் அறியப்படுகிறது.

குறைகடத்தி விவகாரத்தால் சிங்கப்பூருக்கு நெருக்குதல்

தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா விதித்துள்ள மிக அண்மைய கட்டுப்பாடுகளால் குறைகடத்தி (semiconductor) துறை மெல்ல மெல்ல நெருக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. மின்னணுப் பொருள்களுக்கு உலகளாவிய அளவில் தேவை குறைந்து வரும் நிலையில் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. உலகின் மொத்த குறைகடத்திகளில் 11 விழுக்காட்டையும் கணினிச் சில்லு தயாரிக்கும் சாதனங்களில் 20 விழுக்காட்டையும் சிங்கப்பூர் விநியோகம் செய்து வருகிறது. குறிப்பிட்ட சிலவகை குறைகடத்திகள் தொடர்பில் புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததை அடுத்து, உற்பத்தியையும் ஏற்றுமதியையும் துறை குறைக்க வேண்டியுள்ளது.