அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைப் பயனீட்டாளர்கள் சமாளிக்க உதவும் நோக்கில், அதிகம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் வியாழக்கிழமைகளில் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் கழிவு விலையில் விற்கப்படும். அத்துடன், கிட்டத்தட்ட 500 பொருள்களில் மாதந்தோறும் 50 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல், அதேவிலையில் வைத்திருக்கப்படும்.
உலகளாவிய நிலையில் அதிகரிக்கும் பொருள்களின் விலை, விநியோகத் தொடரில் ஏற்படும் தடைகள் ஆகிய சவால்களை ஃபேர்பிரைஸ் நிறுவனம் சந்தித்து வந்தாலும் உயரும் செலவுகள் குறித்து மக்களின் கவலையை அறிந்து உதவும் தன் கடப்பாட்டை இப்புதிய திட்டம் பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆதரவுத் திட்டத்தின்கீழ் நான்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்றான விலை முடக்கம், மாதத்தின் இறுதி வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்.
வாரந்தோறும் வெவ்வேறு பொருள்களின் விலையில் 50 காசு வரை கழிவு வழங்கப்படும் அம்சமும் உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் அச்சு, இணைய, சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் ஒவ்வொரு வியாழன் அன்றும் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
முன்னோடி மற்றும் 'மெர்டேக்கா' தலைமுறையினர், மூத்த குடிமக்கள், 'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட நீல அட்டைதாரர்கள் ஆகியோருக்குத் தற்போது வழங்கப்படும் விலைக் கழிவுத் திட்டங்களும் தொடரும். திங்கள் முதல் வெள்ளி வரை பொருள் வாங்கும் இப்பிரிவினர், 5% விலைக் கழிவைப் பெறுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் ஒருசில பொருள்களை என்டியுசி தொழிற்சங்கம் மற்றும் 'லிங்க்' உறுப்பினர்கள் 50% வரையிலான கழிவு விலையிலும் வாங்க முடியும். ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய மலிவான, தரமான பொருள்களைத் தேர்வுசெய்வது நான்காவது அம்சமாகும்.
"நிச்சயமற்ற பொருளியல் சூழலில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதில் பயனீட்டாளர்களின் கவலையை நாங்கள் அறிவோம். மளிகைப் பொருள்கள், அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்த முழுமையான ஓர் ஆதரவுத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம்," என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விபுல் சவ்லா தெரிவித்தார்.

