டிசம்பர் மாத விடுமுறையின்போது சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான விமானப் பயணக் கட்டணங்கள் 78 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.
பெருந்தொற்றுக்கு முன்னர் பள்ளி விடுமுறைக் காலங்களில் இருந்ததைவிட தற்போது பள்ளி விடுமுறையின்போது விமானக் கட்டணங்கள் கணிசமாகக் கூடியுள்ளதாக பயண முகமைகள் கூறுகின்றன.
தமிழ் முரசு சில விமான நிறுவன இணையத்தளங்களில் பார்த்தபோது, நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சென்னை, திருச்சிராப்பள்ளி, போன்ற இடங்களுக்கு பெரியவருக்கான ஒரு வழி விமானக் கட்டணம் ஏறத்தாழ 300 வெள்ளியாக உள்ளது.
அது பயணப் பெட்டி எடையும் கூடுதல் கட்டணங்களும் சேர்க்கப்படாத அடிப்படைக் கட்டணமாகும்.
டிசம்பர் இறுதி வாரத்தில் சிங்கப்பூர் திரும்புவதற்கான ஒரு வழி அடிப்படைக் கட்டணம் சுமார் 400 வெள்ளி முதல் 450 வெள்ளி வரையாக உள்ளது.
பயணப் பெட்டி எடையுடன் கூடிய விமானச் சேவைகளில் சென்னை, திருச்சி போன்றவற்றுக்கான ஒரு வழிக் கட்டணம் 420 வெள்ளிக்கு அதிகமாகவும் அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பும் கட்டணம் 500 வெள்ளி முதல் 650 வெள்ளியாகவும் உள்ளது.
தென் கொரியாவுக்கான விமானக் கட்டணம் வழக்கமான நேரங்களில் இருப்பதைவிட சராசரியாக 78 விழுக்காடு அதிகமாக உள்ளன. பிலிப்பீன்ஸுக்கான பயணக் கட்டணம் 70 விழுக்காடு உயர்ந்து காணப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பயணக் கட்டணங்கள் 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.
ஆனால் ஜப்பான், ஹாங்காங் தைவான் போன்ற ஆசியாவில் உள்ள சில இடங்களுக்கான விமானக் கட்டணம், செப்டம்பர் மாதம் காணப்பட்டதைவிட பள்ளி விடுமுறைக் காலத்தில் குறைந்து காணப் படுவதாக ஷின் மின் செய்தித்தாள் கூறியது.
விமானப் பயணக் கட்டணங்கள் கூடியதற்கு பல காரணங்கள் உள்ளன.
பயணங்களுக்கான தேவை உயர்ந்துள்ளதால் கட்டணங்கள் கூடியுள்ளதாக டிராவலோகா, எக்ஸ்பீடியா, சிடிசி போன்ற இணையத்தளங்களும் பயண முகமைகளும் தெரிவித்தன.
கொவிட்-19 கிருமிப் பரவலால் முன்பிருந்ததைவிட விமான நிறுவனங்கள் குறைவான விமானச் சேவைகளையே வழங்குகின்றன.
அத்துடன், ரஷ்ய- உக்ரேன் போரால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்ததும் விமானப் பயணக் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாகச் சுட்டப்பட்டது.

