ஓராண்டில் தான் பயன்படுத்துவதைவிட இருமடங்குக்கும் அதிக எரிசக்தியை உற்பத்தி செய்யும்கெப்பல் இன்ஃபிராஸ்ட்ரக்சர் @சாங்கி கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.
கட்டடத்தில் வெளிப்புறத்திலும் மேற்கூரையிலும் 4,000 சதுர மீட்டர் அளவிலான சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறைவான கரிமத்தை வெளியேற்றும் கட்டுமானங்களை நோக்கிச் செல்ல சிங்கப்பூர் எடுத்து வரும் முயற்சிகளில் கட்டடத் திறப்பு ஒரு மைல்கல் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். கட்டடத் திறப்புவிழாவில் அவர் நேற்று கலந்துகொண்டு பேசினார்.
கட்டடத்தில் ஓராண்டுக்கு 600,000 கிலோவாட் மணிநேர அளவுக்கு புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தீவு முழுவதும் உள்ள தனது வட்டாரக் குளிரூட்டி ஆலைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு கெப்பல் அந்த எரிசக்தியைப் பயன்படுத்துகிறது.
கெப்பலின் இந்தப் புதிய கட்டடத்தில் தவிர்க்கப்படும் கரிம வெளியேற்றம், சுமார் 7,000 புதிய மரங்களை நட்டு அவை உள்வாங்கும் கரிமத்துக்குச் சமமானது என்று திரு லீ சுட்டினார்.
"சிங்கப்பூர் வெளியேற்றும் கரிமத்தில் 20 விழுக்காட்டுக்கு மேல் நமது கட்டடங்கள் வெளியேற்றுபவை. கரிம வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றும் நம் குறிக்கோளை அடைய கட்டடங்களைப் பசுமைமயமாக்குவது முக்கியம்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கரிம வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தும் தனது குறிக்கோளை வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அடைய சிங்கப்பூர் அடைய முடியும் என்று நம்புவதாக அரசாங்கம் சென்ற பிப்ரவரி மாதம் கூறியது. கரிம வெளியேற்றத்தைக் குறைத்து, உலக வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளின் ஒன்றாக சிங்கப்பூர் அந்த இலக்கை நிர்ணயித்துள்ளது.

