தானியக்கம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிக்கிறது
செயற்கை நுண்ணறிவு, தானியக்கப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து அதன் ஆதிக்கத்தால் தகவல் தொடர்பு துறையில் 13 விழுக்காடு தொழில்களுக்கு ஆபத்து ஏற்படும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு பொறியியலாளர்கள், மின்னிலக்கச் சொத்து முகவர்கள், ஊடக நடத்து நர்கள் உள்ளிட்டோருக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று நேற்று வெளியிட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதே சமயத்தில் மென்பொருள் பொறியாளர்கள், மேகக் கணினி கட்டமைப்பு, தரவுப் பகுப்பாளர்கள் ஆகியோருக்கு தேவை இருக்கும். இதனால் சிங்கப்பூரில் உள்ள தகவல் தொடர்பு துறை ஊழியர் அணியின் திறன்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் இந்த ஆய்வு, இத்துறையின் வேலை உருமாற்ற வழிகாட்டி திட்டமாக (Job Trans formation Map) அமைகிறது.
இதனை வெளியிட்டுப் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வேலையை மறுவடி வமைக்க முதலாளிகளுக்கு இந்தத் திட்டம் வழிகாட்டும் என்றார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 5ஜி கற்றல் விழாவில் கலந்துகொண்ட அவர், உருமாறும் அல்லது மாற்றமடையும் வேலைகளைப் பெறத் தேவையான பயிற்சிகளை முதலாளிகள் வழங்கு வார்கள் என்று கூறினார்.
"மூன்று முக்கிய முன்னுரிமைகள் உள்ளன. ஒட்டுமொத்த ஊழியர் அணியையும் மின்னிலக்கத் திறன்களுடன் மேம்படுத்துதல், தகவல் மற்றும் தொடர்பு ஊழியர் அணி போட்டித்தன்மையுடன் இருக்க உதவுவது, தொழில்துறையின் ஆதரவுடன் திறனை மேம் படுத்தும் முயற்சிகளை அதிகரிப்பது," என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.
'ஜேடிஎம்' வழிகாட்டித் திட்டம், பாதிக்கப்படும் வேலைகளை அடையாளம் காட்டுகிறது.
முற்றிலும் மாறுபட்ட வேலை களாக இருக்கலாம் அல்லது மற்ற வேலைகளுடன் இணைக்கப்படலாம். குறைந்த மாற்றங்களுடன் சில வேலைகள் ஓரளவு பாதிக்கப்படலாம்.
தகவல்தொடர்பு துறையில் உள்கட்டமைப்பு பொறியியலாளர்கள், தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் போன்றோர் மேகக்கணினி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களால் பாதிக்கப் படுவார்கள்.
இத்தகைய பணிகள் சேவைகள் வழங்கும் வெளிநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படலாம். தொழில்நுட்பத்தால் தானியக்கமயமாக்கப்படலாம் அல்லது பிற பணிகளின்கீழ் கொண்டு வரப்படலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
இதே போன்ற போக்குகள் காரணமாக தரவு நிர்வாக மேலாளர்கள், பொருள் தயாரிப்பு மேலாளர்கள் மத்திமமான பாதிப்புகளை எதிர்நோக்குவார்கள் என்று ஆய்வு மேலும் தெரிவித்தது.

