பறந்துகொண்டிருந்த எஸ்ஐஏ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய 37 வயது அமெரிக்கருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அவரது செயல் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது உன்று நீதிமன்றம் கூறியது.
கடந்த மாதம் 29ஆம் தேதி லா ஆன்டி ஹியன் டக் எனும் அந்த ஆடவர் மீது மிரட்டும் வார்த்தை களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டு பறந்துகொண்டிருந்த எஸ்ஐஏ 'எஸ்கியூ33' விமானத்தில் வேண்டு மென்றே விமானச் சிப்பந்திக்கு காயம் விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பறந்துகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் உரக்கக் கத்தினார். தலைமேலே பெட்டி வைக்கும் இடத்திலிருந்து பயணி ஒருவரின் பெட்டியை வெளி யே எடுத்தார். அவரைத் தடுத்த விமானச் சிப்பந்தியை அவர் தாக்கினார் என்று சொல்லப்படுகிறது.
ஹியன் டக் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. ஆனால் பிணையில் விடுவிக்கக் கோரி அவர் விண்ணப்பித்திருந்தார். நீதிமன்றத்தில் பேசிய அரசாங்க வழக்கறிஞர் லிம், குற்றம்சாட்டப்பட்டவர் பொதுமக்களுக்கு ஆபத்தாக விளங்குவதாக 'ஐஎம்எச்' மனநலக் கழகத்தின் மனோவியல் நிபுணரின் மதிப்பீடு தெரிவிப்பதாக கூறினார்.
"வெளிநாட்டில் இருப்பதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு தங்குவதற்கு நிலையான இடம் இல்லை. இங்கு அவர் வேலையும் செய்யவில்லை. அவர் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதைக் கண்காணிக்க யாரும் இல்லை," என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவர், 'ஷிசோஃபிரெனியா' (schizophrenia) மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
"குற்றம்சாட்டப்பட்டவர் போதைப் பொருளை உட்கொண்ட பின்னணியைக் கொண்டவர் என்பதால் அவர் மீண்டும் போதைப் பொருளை பயன்படுத்தினால் அது அவருக்கு ஆபத்தாக அமையலாம்," என்று வழக்கறிஞர் லிம் விளக்கினார்.
ஹியன் டக்கை விமானத்தில் அனுப்புவதும் ஆபத்தானது என்றார் அவர்.
இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே ஹியன் டக்கை சந்திக்க அனுமதி கேட்டு இயூஜின் துரைசிங்கம் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த அவரது வழக்கறிஞர் ஜோஹன்னஸ் ஹாடி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஹியன் டக் உட்பட 208 பயணிகள் பயணம் செய்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் கைப்பெட்டி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறியதாக தெரிய வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து செப்டம்பர் 28ஆம் தேதி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த விமானம் சாங்கியில் பத்திரமாக தரை இறங்கும் வரை விமானப்படையின் இரு போர் விமானங்கள் கூடவே வந்தன.

