தனது தாய் மரணத்துக்கு கவனக்குறைவான சிகிச்சையே காரணம் என்று கூறி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்தவர் தோல்வி அடைந்துள்ளார். டான் டோக் செங், மூன்று மருத்துவர்கள் மீது அவர் வழக்குப் போட்டிருந்தார்.
ஆனால் 74 வயது டான் யாவ் லானுக்கு டான் டோக் செங் மருத்துவமனையும் மூன்று மருத்துவர்களும் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தார்.
திருமதி டானின் மகன் சியா சூ கியாங், மருத்துவர்கள் துரைராஜ் டி. அப்பாதுரை, லீ வெய் ஷெங், ரஞ்சனா ஆச்சார்யா ஆகிய மூவரும் டான் டோக் செங் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் தனது தாயாருக்கு சிகிச்சை அளிப்பதில் கவனக்குறைவாக இருந்ததாக வாதிட்டார்.
"மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு இருந்ததை மருத்துவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
"குடும்பத்தினர் விருப்பத்திற்கு மாறாக எனது தாயை குளிக்க அழைத்துச் சென்றனர். அப்போது நிலைகுலைந்து விழுந்த அவரை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்து களையும் நிறுத்திவிட்டனர்," என்று சியா கூறியிருந்தார்.
திரு சியா, டான் டோக் செங் மருத்துவமனையும் மூன்று மருத்துவர்களும் $800,000 இழப்பீடு தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
சிறுநீரக நோய், நீண்டநாள் இதயநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் திருமதி டான் பாதிக்கப்பட்டிருந்தார்.
2018 ஏப்ரல் 20ஆம் தேதி அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் டான் டேக் செங் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவசர வாகனத்தில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு அடையாளம் தெரியாத தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்போது கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 22ஆம் தேதி அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மறுநாள் 23ஆம் தேதி தாதி ஒருவர் அவர் குளிப்பதற்கு உதவி செய்தார். பின்னர் திருமதி டான் உடையை மாற்றிக்கொண்டிருந்தபோது மயக்கமடைந்தார்.
அப்போது மற்றோர் ஊழியரும் சேர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் மயக் கத்திலிருந்து மீளவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகு 2018 மே 13ஆம் தேதி அவர் காலமானார்.
பிரேதப் பரிசோதனை நடத்த டானின் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை. அதன் பிறகு நடந்த மரண விசாரணையில் திருமதி டான் சளிக்காய்ச்சலுடன்கூடிய இதய நோயால் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
அவரது மகனின் வழக்கறிஞர் கிளாரன்ஸ் லுன், திருமதி டான் கடுமையான மாரடைப்பால் இறந்தார் என்று கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெளிவில்லாதது என்றார். திருமதி டானுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை யால் அவரது உடல் நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டதை நீதிபதி
சுட்டிக்காட்டினார்.
சிவில் சட்டத்தின் கீழ் திருமதி டானின் குடும்பத்துக்கு இழப்பீடாக 15,000 வெள்ளியும் இறுதிச்சடங்கு செலவுக்கு 10,000 வெள்ளியும் கிடைத்திருக்கலாம்.

