சிங்கப்பூரின் மத்திய வங்கி, தன் நாணயக் கொள்கையை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் பணவீக்கத்தைச் சமாளிக்கும் அளவுக்கு சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு உயர தன் ஆதரவை அந்த வங்கி அதிகமாக்கி இருக்கிறது.
மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இன்று வெள்ளிக்கிழமை கூடியது. ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான வெள்ளியின் மதிப்பு இன்று காலை 10.07 மணிக்கு 0.6 காசு அதிகமாகி $1.4220 ஆக இருந்தது.
கடந்த காலத்தில் நாணயக் கொள்கை தொடர்பில் இடம்பெற்று வந்துள்ள நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் வகையில் இப்போது கொள்கை மாற்றம் இடம்பெறுகிறது.
இதன் விளைவாக, பொருள், சேவை இறக்குமதிகள் காரணமாக ஏற்படக்கூடிய பணவீக்கம் மேலும் குறையும். உள்நாட்டில் விலை உயர்வு தடுக்கப்படும். ஆணையத்தின் நாணயக் கொள்கை அடுத்த சில மாதங்களில் பணவீக்கத்தைக் குறைத்து விலைகள் நிலைப்படுவதை உறுதிப்படுத்தும். இதனால் நீடித்த வளச்சிக்கான அடிப்படை அமையும் என்று ஆணையம் தெரிவித்தது.


