டிஎஸ்ஓ எனப்படும் தற்காப்பு அறிவியல் நிறுவனத்தின் இலக்கு இன்னமும் மாற்றமடையாமல் அப்படியே இருந்து வருகிறது. அது முன்பு எப்போதையும்விட இப்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் அறிவியல் நிறுவனம் மின்னணு பரிசோதனை நிலையம் என்ற பெயரில் 1972ல் அமைக்கப்பட்டது.
டாக்டர் கோ கெங் சுவீ போன்ற முன்னோடித் தலைவர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படையைத் தோற்றுவித்தபோது முழு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தனர்.
என்றாலும் சில நேரங்களில் சிங்கப்பூருக்கு மிக முக்கியமான தொழில்நுட்பங்கள் கிடைக்காமல் போனதை அடுத்து மின்னணுப் பரிசோதனை நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
டிஎஸ்ஓ என்று குறிப்பிடப்படும் அந்தப் பிரிவின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த விருந்தில் பிரதமர் லீ கலந்துகொண்டு உரையாற்றினார்.
வர்த்தக ரீதியில் பல தற்காப்பு தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன என்றாலும் ரகசியங்களை ரகசியமாக பாதுகாக்கும் நோக்கத்துடன் அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் முடிவெடுத்தது.
ரகசிய அடிப்படையிலான தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கு வழங்கி சிங்கப்பூரின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவுவது டிஎஸ்ஓவின் இலக்கு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

