இந்த ஆண்டில் நடப்புக்கு வந்த வாழ்க்கைச் செலவு ஆதரவு தொடர்பிலான பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் 40% கீழ்த்தட்டு குடும்பங்கள், ஓய்வு பெற்றோர் குடும்பங்களுக்கு விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலும் ஈடுசெய்யப்பட்டுவிடும்.
அந்தச் செயல்திட்டங்களில், நேற்று அறிவிக்கப்பட்ட புதிய $1.5 பில்லியன் உதவித் திட்டங்களும் உள்ளடங்கும்.
நடுத்தர 20 விழுக்காட்டு குடும்பங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு ஆகும் கூடுதல் செலவில் பாதிக்கும் மேற்பட்ட அளவுக்கு ஈடுசெய்யப்பட்டுவிடும் என்று நிதி அமைச்சின் மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
அப்படி குடும்பங்களுக்கான செலவு ஈடுசெய்யப்படுவதால் பணவீக்கத்தின் பாதிப்புகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் குறையும் என்று அமைச்சு அறிக்கையில் கூறியது.
குறிப்பாக, 20 விழுக்காட்டு அடித்தட்டு குடும்பங்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு ஆதரவு செயல்திட்டங்கள் காரணமாக அத்தகைய குடும்பங்களுக்கு ஆன கூடுதல் சராசரி செலவில் ஒன்றரை மடங்கிற்கும் அதிகமாக ஈடுசெய்யப்பட்டுவிடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
பணவீக்கம் இப்போது அதிகரித்து இருப்பதால் வாழ்க்கைச் செலவு கூடிவிட்டது. அந்தச் செலவை ஈடுசெய்ய அரசாங்கம் குடும்பங்களுக்கு உதவும் நான்கு சுற்று செயல்திட்டங்களை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
கடந்த ஜூன் மாதமும் அக்டோபர் மாதமும் தலா $1.5 பில்லியன் ஆதரவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஏப்ரல் மாதம் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டு தொகை வரவுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
அத்தகைய திட்டங்கள் சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது; அவர்களின் வாழ்க்கைச் செலவை எந்த அளவுக்கு ஈடுசெய்துள்ளது என்பதை அறிக்கை கணித்தது.

