சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம், அடுத்த ஆண்டு பணவீக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தன்னுடைய முதலாவது மதிப்பீட்டை வெளியிட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் விலையேற்றத்தின் வேகம் குறையும் என்றும் விரைவில் நடப்புக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி வரி உயர்வின் தாக்கம் தற்காலிகமான ஒன்றாகவே இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி உயர்வின் ஒரு நேர தாக்கத்தை கருத்தில்கொண்டு கணக்கிட்டுப் பார்க்கையில், அடுத்த ஆண்டில் மூலாதார பணவீக்கம் ஏறக்குறைய 3.5% முதல் 4.5% வரைப்பட்ட அளவில் இருக்கும் என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5% முதல் 6.5% வரை இருக்கும் என்று அது கணித்து இருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த ஆண்டில் மூலாதார பணவீக்கம் சராசரியாக 4%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஒட்டுமொத்த பணவீக்கம் கிட்டத்தட்ட 6% இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மூலாதார பணவீக்கம் என்பது தனியார் போக்குவரத்துக்கும் குடியிருப்புக்குமான செலவுகளைச் சேர்க்காமல் கணக்கிடப்படும் ஒன்றாகும்.
இது இப்படி இருக்க, ஜிஎஸ்டி வரியைக் கணக்கில் சேர்க்காமல் பார்த்தால், அடுத்த ஆண்டில் மூலாதார பணவீக்கம் 2.5% முதல் 3.5% வரை இருக்கும். அதேபோல, ஒட்டுமொத்த பணவீக்கம் 4.5%லிருந்து 5.5% ஆக இருக்கும்.
ஜிஎஸ்டி வரி இரண்டு கட்டங்களாக 2% உயர்த்தப்படுகிறது. இப்போது 7% ஆக இருக்கும் அந்த வரி, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 8% ஆக உயரும். 2024 ஜனவரி 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி 9%க்கு அதிகரிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரி உயர்வு 1% ஆக இருந்தபோதிலும் விலையில் அது ஒரு நேர தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்றாலும் பணவீக்கத்தின் மீதான அதனுடைய தாக்கம் தற்காலிகமானதாகவே இருக்கும் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட தனது நாணயக் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் மூலாதார பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வரும்.
இரண்டாம் பாதியில் செலவு நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும்போது மூலாதார பணவீக்கமும் குறையும் என்று ஆணையம் கணித்துள்ளது.
கணிப்புகள் இப்படி இருந்தாலும் இவற்றுக்கு எதிர்மாறான இடர்களும் இருப்பதாக மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
உலகளாவிய நிலையில் வர்த்தகப் பொருள்களின் விலைகள் திடீரென உயரக்கூடும் என்பதாலும் சம்பள உயர்வுகள், பணவீக்கம் அதிக காலம் நீடிப்பது ஆகியவை காரணமாகவும் ஏற்படக்கூடிய இரண்டாம் நிலை தாக்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்த இடர்களில் உள்ளடங்கும்.
பணவீக்கம், வளர்ச்சி இரண்டுக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை கணிசமான அளவுக்கு நிச்சயமில்லாத நிலவரங்கள் இருக்கின்றன என்பதை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
இந்த ஆண்டில் மூலாதார பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாகக் கூடி இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரைப்பட்ட காலத்தில் மூலாதார பணவீக்கம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஏறக்குறைய 4.9% ஆக இருந்தது.
இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3.8% ஆக இருந்தது.
மின்சாரம், எரிவாயு, உணவுப்பொருள்களின் விலை உயர்ந்தது. உலக எரிபொருள் நிலவரம், வேளாண்மைச் செலவுகள் ஆகியவை காரணமாக இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றது.
அதேவேளையில், தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவும் கூடியது. இதன் விளைவாக ஜூலை முதல் ஆகஸ்ட் வரைப்பட்ட காலகட்டத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 7.3% வரை அதிகரித்தது. இந்தப் பணவீக்கம் 2ஆம் காலாண்டில் 5.9% ஆக இருந்தது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் மூலாதார பணவீக்கம் 5.1% ஆகியது. ஒட்டுமொத்த பணவீக்கம் 7.5% ஆக உயர்ந்தது.
இந்த இரண்டு வகை பணவீக்கமும் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை ஆணையம் அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

