சிங்கப்பூரில் நீண்டநாள்களுக்குப் பிறகு மலேசிய 'ஃபிரெஷ்' பிராய்லர் கோழி இறைச்சி கிடைத்ததால் பல வீடுகளில் கோழிக்கறி கொண் டாட்டமாக இருந்தது.
தன்னுடைய பெயர் ரோஸ் என்று மட்டுமே குறிப்பிட்ட 75 வயது மூதாட்டி ஒருவர், விலை அதிகமாக இருந்ததால் கோழி இறைச்சி வாங்குவதையே நிறுத்திவிட்டார்.
ஆனால் நீண்டநாள்களுக்குப் பிறகு மலேசியாவிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பிராய்லர் கோழி நேற்று தீவு முழுவதும் உள்ள கடை களிலும் ஈரச்சந்தைகளிலும் விற்கப் பட்டன.
திருவாட்டி ரோஸ் உட்பட பலரும் கோழி இறைச்சியை வாங்கினர். திருவாட்டி ரோஸ் பிடோக் 85ல் உள்ள சந்தைக்குச் சென்று கோழி இறைச்சியை வாங்கினார்.
இவ்வாரம் முற்பகுதியில் கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா விலக்கிக் கொண்டது.
"கோழி விலை அதிகமாக இருந்ததால் வாங்குவதையே நிறுத்திவிட்டேன். மலேசிய கோழி மீண்டும் விற்கப்படுவதால் இன்று வாங்கினேன்," என்று திருவாட்டி ரோஸ் நேற்று தெரிவித்தார்.
உள்ளூரில் கோழி இறைச்சிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏற்று மதிக்கு மலேசிய அரசு தடை விதித்தது.
தற்போது இந்தத் தடை விலகி யுள்ளதால் ஏறக்குறைய நான்கரை மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 'பிராய்லர்' கோழிகள் ஜோகூர் கடற்பாலத்தைக் கடந்து வியாழன் மதியம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தன.
'பிராய்லர்' கோழிகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. அளவில் பெரியதாகவும் அதிக சதையாகவும் அவை இருக்கும். இந்த வகை கோழிகள்தான் பெரும்பாலான அளவில் பரவலாக விற்கப்படுகின்றன. நாட்டுக் கோழி விலை அதிகமாகவும் சிறியதாகவும் இருக்கின்றன.
பிராய்லர் கோழி இறைச்சியின் விலை முன்பைவிட 15 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக நேற்று விற்கப்பட்டது. பிடோக், கிம் மோ, சிராங்கூன், தோ பாயோ வட்டாரங் களிலும் கோழி இறைச்சி விற்பனை நேற்று அமோகமாக நடை பெற்றது.

