மோசடி அல்லது சட்டவிரோதமாகப் பணத்தைக் கைமாற்றிய செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 339 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் 1,002க்கும் அதிகமான மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
சந்தேக நபர்களில் 227 பேர் ஆண்கள், 112 பேர் பெண்கள். 15லிருந்து 73 வயதுக்கு உட்பட்ட அவர்கள் விசாரணையில் உதவி வருகின்றனர்.
வர்த்தக விவகாரப் பிரிவு, ஏழு காவல்துறை பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் சென்ற மாதம் 30ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 13ஆம் தேதிவரை தீவெங்கும் சோதனைகள் மேற்கொண்டதில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். வேலை மோசடி, கடன் மோசடி, இணையக் காதல் மோசடி, அரசாங்க அல்லது சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடி உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் 14.9 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது போன்றவற்றின் தொடர்பில் சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது.

