முரசொலி
கொவிட்-19 கிருமி உலகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளியல் பாதிப்புகள் சமூகப் பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலக மக்களின் ஆயுளையே அது குறைத்துவிட்டது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு தனித்த ஓராண்டில் இடம்பெற்ற அளவுக்குப் பல நாடுகளில் மக்களின் ஆயுட்காலம் இப்போது குறைந்து இருக்கிறது. இதற்கு கொரோனா கிருமிதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 29 நாடுகளை உள்ளடக்கி 2020ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அவற்றில் 27 நாடுகளில் மக்களின் ஆயுளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கொரோனா சாப்பிட்டுவிட்டது. இதைவிட மோசமாக, 22 நாடுகளில் மக்களின் ஆயுட்காலம் அரை ஆண்டுக்கும் மேலாக குறைந்துவிட்டதாக அந்த ஆய்வு தெரிவிப்பதைப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
சிங்கப்பூரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. கிருமியைத் துடைத்து ஒழிக்க, பரவுவதைத் தடுக்க உலகம் பாராட்டும் அளவுக்கு உடனுக்குடன் பல நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்து வந்த போதிலும் அந்தக் கிருமி சிங்கப்பூரர்களின் ஆயுளில் கைவைத்துவிட்டது.
மக்களின் ஆயுள் 10 வாரங்கள் குறைந்திருக்கிறது. பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இது மிக மிகக் குறைவுதான். இருந்தாலும் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயுள் குறைந்திருக்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
இத்தகைய புள்ளிவிவரங்கள் கிடைக்கத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதுவரை சிங்கப்பூரர்களின் ஆயுள் குறைந்ததாக சரித்திரம் இல்லை. கொரோனா அந்த வரலாற்றையே மாற்றிவிட்டது. இதில் சார்ஸ் போன்ற முந்திய தொற்றுகளை எல்லாம் கொரோனா பின்னுக்குத் தள்ளிவிட்டது.
சிங்கப்பூரர்கள் உலகிலேயே ஆக அதிக ஆயுளைக் கொண்டவர்கள். அவர்களின் ஆயுள் கொரோனாவுக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் 83.7 ஆண்டுகளாக இருந்தது. அது, சென்ற ஆண்டில் 83.5 ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது. கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட கூடுதல் மரணங்களே இதற்குக் காரணம் என்று ஆகப் புதிய மக்கள் தொகை போக்கு அறிக்கை தெரிவிக்கிறது.
கிருமி தொற்றத் தொடங்கியது முதல் பல்வேறு காரணங்களால் இடம்பெற்ற மரணங்களுக்கும் கொரோனா இல்லை எனில் ஏற்பட்டு இருக்கக்கூடிய மரணங்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடுதான் கூடுதல் மரணங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் இடம்பெற்ற மரணங்களுக்கான மிக முக்கியமான காரணங்களைப் பார்க்கும்போது கொரோனா ஐந்தாவது இடத்தில் இருந்தது.
மரணம் அடைந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 3.5% ஆக இருந்தன. கொவிட்-19 ஆயுளைக் குறைத்து இருக்கிறது. மரணமடைந்த 200 பேரில் ஏழு பேர் அந்தக் கிருமி காரணமாக மாண்டுள்ளனர்.
அதேவேளையில், மரணங்களுக்கான இதர முக்கியமான காரணங்களை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்பது இன்னும் முக்கியமான ஒன்று. புற்றுநோய், இதய நோய்கள், சளிக்காய்ச்சல், வாதம் தொடர்பான நோய்கள் மரணங்களுக்கான முதல் நான்கு காரணங்களாக உள்ளன.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். இந்த நிலவரத்தில் கொரோனா கைவைக்க இயலவில்லை.
இதற்குக் காரணம் ஆண்களைவிட பெண்கள் உடல் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்களாக இருப்பதுதான். புகைப்பது, குடிப்பது போன்ற உடல் நலனுக்குப் பாதகமான செயல்களில் ஆண்கள் அதிகம் ஈடுபடுவதுண்டு.
இது ஒருபுறம் இருக்க, சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்து கொள்வதில் அலட்சியமாக இருப்பதும் ஆண்களிடம் அதிகம் காணப்படக்கூடிய ஒரு போக்காக உள்ளது.
கொரோனா கிருமியின் தாக்கம் காரணமாக ஆயுள் குறைந்திருப்பது ஒருபுறம் இருக்க, நீண்ட காலப்போக்கில் மேலும் என்ன என்ன பாதிப்புகள், விளைவுகள், தாக்கங்கள் ஏற்படுமோ என்பது இப்போதைக்குத் தெளிவுபட தெரியவில்லை.
கொரோனா கிருமி இன்னமும் ஒழிந்தபாடும் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் சிங்கப்பூரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கையில், நோயை வருமுன் காக்கும் அணுகு முறையை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றாகத் தெரிகிறது.
இதில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' இயக்கம் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.
தேசிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்ற உடல் நலப் பரிசோதனைகளைச் சிங்கப்பூரர்கள் இலவசமாக செய்துகொள்ள அந்தத் திட்டம் உதவும்.
நாள்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற மெடிசேவ் எனப்படும் மருத்துவ சேமிப்புக் கணக்கை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள அத்திட்டம் வழிவகுக்கும்.
அதோடு மட்டுமல்ல, உடல்நலமிக்க வாழ்க்கைபாணியை மக்கள் மேற்கொள்ள அந்தத் திட்டம் வெகுமதியையும் அளிக்கும். வாய்க்குச் சுவையாக இருக்கும் என்பதால் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் பலரிடம் உண்டு.
அளவுக்கு அதிக உப்பு, உடலில் இரத்த அழுத்தம் அதிகமாவது, மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகையால் உணவில் உப்பைக் குறைக்க ஒருமித்த அளவில் முயற்சிகள் இடம்பெற அத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.
கொரோனா போன்ற அப்போதைக்கு அப்போது தலைகாட்டக்கூடிய கிருமித்தொற்று காரணமாக மக்களின் உடல்நலனில், ஆயுளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இருக்கவே செய்யும். அவற்றைத் தவிர்த்துக்கொள்ளவேண்டியது கட்டாயமானது.
அதே நேரத்தில், தனிப்பட்டவர்களும் சமூகமும் அதிக ஆயுளுடன், நல்ல உடல் நலனுடன் இருந்து வருவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சி யையும் சமூகத்தின் ஒட்டுமொத்த முயற்சியையும் சார்ந்து இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதைச் சாதிக்க மக்கள் நல்ல பழக்கவழங்கங்களை நிரந்தரமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் நலனுக்கு ஏற்ற உணவு, உடற்பயிற்சி தேவை.
இவற்றோடு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைத் திறம்பட பயன்படுத்திக்கொண்டு சிங்கப்பூரர்கள் நோய் வருமுன் காக்கும் அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது விரும்பிய பலன்களைத் தரும் என்பது உறுதி.

