சிங்கப்பூரில் 'எக்ஸ்பிபி' என்ற ஓமிக்ரான் உருமாறிய கிருமி காரணமாக கொவிட்-19 தொற்று அதிகரிக்கிறது. இதனால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக அடுத்த இரண்டு வாரங்களில் இங்குள்ள மருத்துவமனைகள் 800க்கும் மேற்பட்ட படுக்கைகளை ஒதுக்கி வைக்கும்.
அவசரமற்ற அறுவைசிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும். பொது மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளித்து அதற்கேற்ப தங்களுடைய வளங்களை ஒதுக்கும்.
சுகாதார அமைச்சு நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
இப்போதைய தொற்று நிலவரத்தைச் சமாளிக்கக்கூடிய அளவில் மருத்துவமனைகள் இருக்கின்றன.
என்றாலும் தொற்று தொடர்ந்து கூடும் பட்சத்தில் அதற்கேற்ப மருத்துவமனைகளின் ஆற்றலை வைத்திருக்க வேண்டியது முக்கியமானது என்று அமைச்சு தெரிவித்தது.
தொற்று கூடுவதால் அவசரசிகிச்சை துறைகளுக்கு நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சிங்கப்பூரின் மருத்துவ சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
ஆகையால், அவசர சிகிச்சைத் துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகள் ஏற்கெனவே ஆயத்த நடைமுறைகளைத் தொடங்கி இருக்கின்றன. மருத்துவர்கள், தாதியர்களைத் தயாராக வைத்திருப்பது, மேலும் படுக்கைகளுக்குத் தயார் செய்வது, இடவசதிகளைத் தயார்ப்படுத்துவது முதலானவை இவற்றில் அடங்கும்.
இப்போதைய நிலவரப்படி மருத்துவமனை படுக்கைகளில் ஏறத்தாழ 93% நிரம்பி உள்ளன. கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும் 50 இடங்கள் கொவிட்-19 நோயாளிகளுக்காக தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போதைக்கு இது போதுமானது என்று பேராசிரியர் மாக் கூறினார்.
கொரோனா நோயாளிகளுக்காக மொத்தம் 670 தனிமைப் படுக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது பயன்படுத்தப்படும் படுக்கைகள் 8%கூட இல்லை. அடுத்த வாரம் மூன்று பொது மருத்துவமனைகளில் மேலும் 100 படுக்கைகள் தயார் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே, வீட்டிலேயே குணமடையும் கொவிட்-19 நோயாளி களுக்குத் தொலைதூர சுகாதாரச் சேவை வழியாக மேலும் ஆதரவு கிடைக்கும். மருத்துவர்களும் தாதியர்களும் காணொளிகள் மூலம் ஆலோசனை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

