புத்தகங்கள் படிப்பதில் சிறாருக்கு ஆர்வத்தை உண்டுபண்ணும் வகையில் 1,800க்கும் மேற்பட்ட குறைந்த வருமான குடும்பங்கள் குட்டி நூலகம் ஒன்றைப் பெறவிருக்கின்றன.
சிறாரின் வயதுக்கேற்ற புத்தகங்களுடன் கூடிய ஓர் அலமாரி வடிவில் அந்த நூலகம் இருக்கும்.
'கிட்ஸ்டார்ட் ஸ்டோரிஸ்' என்ற ஒரு செயல்திட்டத்தின்கீழ் இந்த நூலகங்கள் குறைந்த வருமான குடும்ப வீடுகளில் அமையும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் சன் ஸுவெலிங் நேற்று சுவா சூ காங்கில் கியட் ஹோங் சமூக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்தச் செயல்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பிள்ளைகளுக்குக் கதை சொல்வது, அவர்களைப் புத்தகம் படிக்குமாறு ஊக்குவிப்பது ஆகியவை மூலம் பெற்றோர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தங்கள் பிள்ளைகளிடம் சிறுவயதிலேயே ஏற்படுத்த இந்தச் செயல்திட்டம் ஆதரவு அளிக்கும்.
வீடுகளில் அமையும் குட்டி நூலகங்களுக்கு ஈட்டன்ஹவுஸ் சமூக நிதியமைப்பும் எஸ்பி குழுமமும் பொறுப்பாதரவு வழங்குகின்றன.
'கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர்' என்ற பெயரில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.
ஆறு வயது வரைப்பட்ட சிறார்கள் உள்ள குறைந்த வருமான குடும்பங்களுக்கான ஒரு முன்னோடிச் செயல்திட்டமாக இது நடைமுறைக்கு வருகிறது.
சிறார் மேம்பாடு, சத்துணவு, பெற்றோர்-பிள்ளை கலந்துறவாடல் போன்ற துறைகளில் இந்தச் செயல்திட்டம் ஆதரவு அளிக்கிறது.
வீடுகளில் அமையும் குட்டி நூலகங்கள், சிறாரிடையே புத்தகம் படிப்பதை அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக ஆக்கும் என்று இந்த மூன்று அமைப்புகளும் தெரிவித்து இருக்கின்றன.
கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர் அமைப்பு தயாரித்து இருக்கும் காணொளிகளும் பெற்றோருக்குக் கிடைக்கும். கைக்குழந்தைகள், சிறாரிடம் கதை சொல்வது, பேசிப் பழகுவது போன்ற நுணுக்கங்களை அந்தக் காணொளி மூலம் பெற்றோர்கள் தெரிந்துகொள்ளலாம்.
படங்கள், பாட்டுகள், நடனம் வழி புத்தகங்கள் படிப்பதை மிகவும் நாட்டமிக்கதாக ஆக்குவது எப்படி என்பது பற்றி பெற்றோர்கள் தெரிந்துகொள்ளவும் அந்தக் காணொளி உதவும்.
நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புத்தகங்கள் மிக மிக முக்கியமானவை என்பதை வலியுறுத்திக் கூறினார். அவை சிறாருக்கு முற்றிலும் புதிய ஓர் உலகத்தைக் காட்டுகின்றன.
அந்த உலகில் அவர்கள் தங்கள் கற்பனைத் திறனை, எண்ணங்களை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.

