சாலை விபத்துகளைக் குறைக்க $550,000; மன்றம் திரட்டியது

சாலை விபத்துகளைக் குறைக்க $550,000; மன்றம் திரட்டியது

2 mins read
695404ed-7979-4051-a9c6-81e00dd0d43f
-

சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மன்றம் வெள்­ளிக்­கி­ழமை நடந்த விருந்­தில் $550,000 திரட்­டி­யது.

வாகன ஓட்­டு­நர்­க­ளுக்­கும் பாத­சா­ரி­க­ளுக்­கும் சாலை­களைப் பாது காப்­பாக ஆக்­கு­வ­தற்­கான முயற்சி­களுக்கு ஆத­ர­வாக அந்­தத் தொகை திரட்­டப்­பட்­டது.

இந்த ஆண்­டில் முதல் பாதி­யில் சாலை விபத்­து­கள் அதி­க­ரித்­து உள்­ளன. இந்­தச் சூழ­லில் மன்­றம் சாலைப் பாதுகாப்­புக்கு நிதி திரட்டி இருக்­கிறது.

உள்­துறை அமைச்சு அமைத்­துள்ள அறப்­பணி அமைப்­பான அந்த மன்­றம், சிங்­கப்­பூர் சாலைப் பாது­காப்பு மாதம், போதை­யில் வாகனம் ஓட்­டு­வ­தற்கு எதி­ரான இயக்­கம் போன்ற செயல்­திட்­டங்­களை நிர்­வ­கித்து நடத்­து­கிறது.

உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் ஃபைசல் இப்­ரா­ஹிம் மன்­றத்­தின் விருந்­தில் கலந்துகொண்­டார். இந்த ஆண்டின் முதல் பாதி­யில் உயிர் பலி சாலை விபத்­து­கள் குறைந்து இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்த ஆண்­டின் ஜன­வரி முதல் ஜூன் வரைப்­பட்ட காலத்­தில் 44 சாலை விபத்­து­களில் சிக்கி 45 பேர் கொல்­லப்­பட்­ட­னர். 2021 முதல் பாதி­யில் நிகழ்ந்த 52 விபத்­து­களில் 58 பேர் மாண்­ட­னர் என்று அவர் கூறி­னார்.

ஆனால், சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டில் விபத்­து­க­ளின் மொத்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாக இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைசல் தனது உரை­யில் குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக, அள­வுக்கு அதிக வேக­மாக வாக­னத்தை ஓட்­டிச் சென்­ற­தால் நிகழ்ந்த விபத்­து­கள், குடித்­து­விட்டு போதை­யில் வாக­னத்தை ஓட்­டிச் சென்று கைதா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை கூடி இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் நிகழ்ந்த 3,159 சாலை விபத்­து­கள் காயம் ஏற்­படுத்­திய அல்­லது உயிரை பலி­வாங்­கிய விபத்­து­க­ளாக இருந்தன. சென்ற ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் இதேபோன்ற 3,012 விபத்­து­கள் நிகழ்ந்­தன.

அதே காலகட்­டத்­தில் வேகக்­கட்­டுப்­பாட்டை மீறிய சம்­ப­வங்­கள் 66,480லிருந்து 69,291 ஆகின. வேக­மாக வாக­னத்தை ஓட்­டிச்­சென்­ற­தால் நிகழ்ந்த விபத்­து­கள் 474 லிருந்து 487 ஆகக் கூடின.