இரண்டாம் நிலை நிபந்தனை ஏற்பாட்டின்கீழ் அக்டோபர் 25ஆம் தேதி முதல் அனுமதி
கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக தெரியவரும் கைக்குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் அக்டோபர் 25 முதல் இரண்டாம் வகை நிபந்தனைகளின்கீழ் தங்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு குணமடைய முடியும்.
தொற்று காரணமாக மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை வயதுள்ள கைக்குழந்தைகளுக்கும் 36 வாரங்களுக்கும் குறைந்த கர்ப்பிணிகளுக்கும் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறைவு என்பதே இதற்கான காரணம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் தலைகாட்டும் ஓமிக்ரான் உருமாறிய கிருமி ஏற்படுத்தும் பாதிப்புகளின் அடிப்படை யில் இந்த மதிப்பீடு இடம்பெறுவதாகவும் அமைச்சு விளக்கியது.
இப்போது முதலாவது நிலை நிபந்தனைகளின்கீழ் கைக்குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வீட்டிலேயே குணமடையும் செயல்திட்டத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். அவர்கள் குணமடைவதை சுகாதார அமைச்சு கண்காணிக்கிறது.
இரண்டாவது நிலை நிபந்தனை களின்கீழ் அவர்கள் வீடுகளில் தாங்களாகவே குணமடைய முடியும்; அல்லது சொந்த மருத்துவர்களின் பராமரிப்பின்கீழ் சிகிச்சை பெற்று குணமடையலாம்.
அவர்கள் தங்களைத் தாங்களே குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஏர்ஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும்;
நோய் தொற்றியவருடன் அணுக்கத் தொடர்பில் இருந்திருப்பதாகத் தெரிய வருபவர்களுக்கு மூன்றாம் நிலை நிபந்தனை உரியது. இத்தகையோர், ஏர்ஆர்டி பரிசோதனை செய்துகொண்டு சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
இதனிடையே, அதிக சிகிச்சை உதவிகள் தேவைப்படக்கூடிய ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லாத ஏறக்குறைய 3,000 நோயாளிகள் வீட்டிலேயே இருந்தபடி பாதுகாப்பாக குணமடைந்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மருத்துவமனைகளின் செயல்திட்டங்கள் உதவி இருக்கின்றன என்று நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் இணை பேராசிரியர் மாக் கூறினார்.
வீட்டிலேயே குணமடையும் கொவிட்-19 நோயாளிகளைப் பொறுத்தவரை தொலைதூர சுகாதாரச் சேவைகள் நீட்டிக்கப்பட்டு அதிக ஆதரவு வழங்கப்படும்.

