மலாய்/முஸ்லிம் பட்டத்தொழிலர்கள் பல தொண்டுகளை ஆற்ற முடியும். அவர்கள் தங்கள் வளங்களைத் திரட்டி சமூகத்திற்கு உதவ வேண்டும். குறிப்பாக மதியுரைஞர்களாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்து அவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
முஸ்லிம் பட்டத்தொழிலர்கள் சங்கத்தின் 4வது தேசிய மாநாடு நேற்று நடந்தது. அதில் 500 பட்டத்தொழிலர்களும் சமூகப் பங்காளிகளும் உள்ளூர் முஸ்லிம் சமூக பிரமுகர்களும் பங்கேற்றனர்.
மலாய்/முஸ்லிம் பட்டத்தொழிலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கே உரிய தேவைகளும் இருக்கின்றன. அவர்களிடம் விருப்பங்களும் கவலைகளும் உள்ளன. அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை சிங்கப்பூர் காணவேண்டி இருக்கும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொண்டு ஊழியர் அணியில் காலத்திற்கு ஏற்றவர்களாக மேம்பட அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் இவற்றில் அடங்கும் என்று திரு வோங் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தை மேலும் வெற்றிபெற்ற சமூகமாக ஆக்குவதற்கு உதவும் புதிய உத்திகளைப் பற்றி விவாதிப்பதற்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை முஸ்லிம் பட்டத்தொழிலர் சங்க மாநாடு நடக்கிறது.
மலாய்/முஸ்லிம் சுய உதவிக் குழு, முஸ்லிம் பட்டத்தொழிலர் சங்கம் போன்ற மலாய்/முஸ்லிம் அமைப்புகள் ஒன்று சேர்ந்தும் அரசாங்கத்தோடும் வலுவாக செயல்பட்டு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றாரவர்.

