மிதிவண்டி ஓட்டுவதற்கென ஒதுக்கப்படும் புதிய தடம் சிலேத்தார் பகுதியில் ஞாயிறு காலை 5 மணி முதல் 11 மணி வரை செயல்படவுள்ளது. அந்தத் தடத்தை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தும் மோட்டார்வண்டி ஓட்டுநர்களுக்கும் மிதிவண்டி ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.
புதிய ஆறுமாத முன்னோட்டத் திட்டத்தின்கீழ், வெஸ்ட் கேம்ப் ரோட்டில் அமைந்திருக்கும் இந்த 4.6 கி.மீ தடத்தில் மிதிவண்டி ஓட்டிகள் மட்டுமே செல்லலாம்.
பேருந்துகளும் இக்குறிப்பிட்ட நேரத்தின்போது தடத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் உட்பட இதர வாகனங்கள் அந்தத் தடத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை.
சாலையின் இரு பக்கங்களிலும் ஒதுக்கப்படும் மிதிவண்டித் தடத்தை குறிக்க, தடிப்பான நீல நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும், சாலை அருகே வைக்கப்பட்டிருக்கும் பலகைகளிலும் சாலைகளிலும் மிதிவண்டி ஓட்டுவதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.
மிதிவண்டித் தடத்தின் தொடக்க நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், செய்தியாளர்களிடம் பேசினார். தடத்தின் அமலாக்க நடைமுறைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார். தடத்தைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வது தொடர்பான புதிய கையேடு ஒன்றும் சாலைப் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
முன்னோட்டத் திட்டத்தின்வழி ஆணையம் கருத்து திரட்டுவதுடன் போக்குவரத்தில் ஏற்படும் தாக்கத்தையும் அது ஆராயும். அதன் பின்னரே எதிர்காலத் திட்டங்களை ஆணையம் உறுதிசெய்யும் என்று தெரிவிக்கப்ட்டது.
இதற்கிடையே, பெரிய குழுக்களாக மிதிவண்டி ஓட்டுவதற்கு தானா மேரா கோஸ்ட் ரோடு மற்றும் வெஸ்ட் கேம்ப் ரோட்டின் மிதிவண்டித் தடங்கள் பாதுகாப்பானவை என அதிகாரிகள் கண்டறிந்துள்ள நிலையில், குழுவினர் எண்ணிக்கையில் விதிக்கப்படும் வரம்பு அகற்றப்படும் என்று திரு பே தெரிவித்தார்.
புதிய தடத்தைப் பயன்படுத்துவதற்கென நேற்று கிட்டத்தட்ட 40 மிதிவண்டி ஓட்டும் ஆர்வலர்கள் வந்திருந்தனர்.

