ஒருவரது தனிநபர் தரவுகளைப் பிறர் தவறாகப் பயன்படுத்தி, அதனால் பாதிக்கப்படுபவருக்கு 'மனரீதியான பெருந்துயரம்' ஏற்பட்டால், தவறு இழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகலாம்.
இருப்பினும், அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக வந்துபோகும் கோபம், வருத்தம் போன்ற உணர்வுகள் இதற்குத் தகுதிபெறாது. சட்டத்தின்கீழ் 'மனரீதியான பெருந்துயரம்' ஏற்படும் நிலையில் ஒருவர் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
ஐந்து சூழல்களைக்கொண்டு தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் தமக்கு நேர்ந்துள்ள தவற்றுக்கு வழக்கு தொடுக்கலாம்.
நிதி தொடர்பான தரவுகள், உயர்மதிப்புடைய சொத்துரிமை, முதலீடுகள் போன்றவை தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும்.
தற்போதைய ஊழியர்களும் கடந்தகால ஊழியர்களும் இத்தகைய தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது.
தங்கள் தரவுகள் மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்படுவதுடன் அறிமுகமில்லாதவர் இடையே பகிர்ந்துகொள்ளப்படும்போது ஒருவருக்குத் துயரம் நேரலாம்.
அச்சூழலில் அவர் வழக்கு தொடுக்கலாம்.
தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியவர் தனது செயலுக்குப் பொறுப்பேற்க மறுத்தால் அதனால் பாதிக்கப்படுபவருக்குத் துயரம் ஏற்படலாம்.
இத்தகைய சூழல்களில் ஒருவர் தமக்கு நேர்ந்துள்ள துயரம் தொடர்பாக வழக்கு தொடுத்தால், முதலில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தரவுகள் ரகசியத்தன்மை தகுதியுடையவையா என்பதையும் வழக்கு தொடுத்தவரின் பின்னணியையும் நீதிமன்றம் ஆராயும்.
தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் தாக்கம் எத்தகையது என்பதும் ஆராயப்படும்.

