சிங்கப்பூரில் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் சிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இக்குறிப்பிட்ட பிரிவினர் $40.4 மில்லியனை இழந்துள்ள நிலையில் கடந்தாண்டு இந்த தொகை $88 மில்லியனாக இரட்டிப்பாகியுள்ளது என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும், 2020ல் வெளிநாட்டினர் மோசடிக்கு ஆளான சம்பவங்களின் எண்ணிக்கை 3,431இலிருந்து கடந்த ஆண்டு 5,210ஆக உயர்ந்திருந்தது. சிங்கப்பூரில் பதிவாகும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. 2021ல் பாதிக்கப்பட்டோர் குறைந்தது $633.3 மில்லியனை இழந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் இழப்புத் தொகை $268.4 மில்லியனாக இருந்தது.
வேலை தொடர்பான மோசடி, இணைய வர்த்தக மோசடி, அதிகாரியாக பாசாங்கு செய்யும் மோசடி போன்றவற்றிற்கு வெளிநாட்டினர் அதிகம் சிக்கியதாக காவல்துறையினர் கூறினர்.
வேலை தொடர்பான மோசடிக்கு வெளிநாட்டு ஊழியர்களும் ஆளாவதாகக் கூறப்பட்டது.
"வெளிநாட்டு ஊழியர்கள், ஃபேஸ்புக் தளத்தில் வேலை விளம்பரங்களை நாடக்கூடும். இவற்றில் பொய்யானவை பல. வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கும் இந்த விளம்பரங்கள், முன்பணம் கேட்பது வழக்கம். தொகை செலுத்தப்பட்டதும் முகவராக பாசாங்கு செய்தவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போய்விடும்," என்று 'டிரான்சியன்ட் ஒர்க்கர்ஸ் கவுன்ட் டூ' அமைப்பின் பொது மேலாளர் திரு இத்தன் குவோ கூறினார்.